போட்டி தேர்வுகளுக்கான அன்றாட தகவல்கள் -14.10.2026
புதிய ஆளுநர்கள் நியமனம்:
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநர் உட்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக இராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதான் மந்திரி தன்-தானிய கிருஷி யோஜனா (PMDDKY)
பிரதான் மந்திரி தன்-தானிய கிருஷி யோஜனா (Pradhan Mantri Dhan-Dhaanya Krishi Yojana – PMDDKY) என்பது இந்தியாவில் பின்தங்கிய மற்றும் குறைந்த விவசாய உற்பத்தி திறன் கொண்ட மாவட்டங்களின் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியத் திட்டமாகும்.
அக்டோபர் 11, 2025 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது,இது ஒரு 6 ஆண்டுகால திட்டமாகும் (2025-26 முதல் செயல்படுகிறது). நீதிக்காயோக்கின் (NITI Aayog) லட்சிய மாவட்டத் திட்டத்தின் (Aspirational Districts Programme) உத்வேகத்தைக் கொண்டு, வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
குறைந்த உற்பத்தி திறன் உள்ள மாவட்டங்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான விதைகளைப் பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவது.
ஒரே பயிரை சாகுபடி செய்வதற்குப் பதிலாக, பருவநிலைக்கு ஏற்ப மாற்றுப் பயிர்கள் மற்றும் பல பயிர் சாகுபடி முறைகளை ஊக்குவித்தல்.
அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்க கிராம ஊராட்சிகள் மற்றும் வட்டார அளவில் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிர்பதனப் பெட்டிகளை உருவாக்குவது.
இந்திய ராணுவத்தின் ‘பாரத் அரிசி’
இந்திய ராணுவத்தின் ‘பாரத் அரிசி’ (Bharat Rice) திட்டம் என்பது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பங்கீட்டுச் சங்கிலியை (Ration Supply Chain) நவீனப்படுத்தவும், உயர்தர உணவை உறுதிப்படுத்தவும் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய பாதுகாப்புத் திட்டமாகும்.
லடாக், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தொலைதூர மற்றும் கடினமான மலைப்பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்குத் தரமான அரிசியை வழங்குவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் அரிசி கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு, உடைபட்ட மற்றும் நிறம் மாறிய மணிகள் இல்லாமல் சுத்தமாக வழங்கப்படுகிறது.
கடினமான நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பகுதிகளில் பொருட்களைச் சுமந்து செல்வதைக் எளிதாக்கும் வகையில், 10 கிலோ மற்றும் 30 கிலோ எடையிலான எளிய முறையில் கையாளுவதற்கு ஏற்ற பைகளில் (Ergonomic bags) இந்த அரிசி வழங்கப்படுகிறது.
இந்திய ராணுவம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, இந்திய உணவுக்கழகம் (FCI) மற்றும் நாஃபெட் (NAFED) போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்த இந்திய உணவுக்கழகத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அவசரகால சூழ்நிலைகளில் FCI-ன் கிடங்குகள் மற்றும் சேமிப்பு கட்டமைப்பு வசதிகளை ராணுவம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

