கணவன் மனைவி ஒற்றுமையை வளர்க்கும் உமா மகேசுவர விரதம்
சிவபெருமானையும் உமாதேவியையும் ஒன்றிணைத்து வழிபாடு செய்யும் மிகச் சிறப்பு வாய்ந்த விரதங்களில் உமாமகேசுவர விரதம் முதன்மையானது. தம்பதிகளின் ஒற்றுமை, குடும்பச் செழிப்பு மற்றும் நல்வாழ்வு பெற இவ் விரதம் கடைப்பிடித்தால் வாழ்க்கை சிறக்கும்
உமாமகேசுவர விரதம் காலம் எப்போது?
இவ்விரதம் ஆண்டுதோறும் பாத்ரபத மாதப் பௌர்ணமி ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அனுசரிக்கப்படுகிறது. சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்த உமாமகேசுவர ரூபத்தை வழிபடுவதற்கு இந்தத் திதி மிக உகந்ததாகக் கருதப்படுகிறது.
உமாமகேசுவர விரதத்தின் வரலாறு
ஒருமுறை கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி, விஷ்ணு பகவான், பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்கள் உமாமகேசுவர விரதத்தை முறையாகக் கடைப்பிடித்துத் தங்களின் தடங்கல்களை நீக்கிக்கொண்டு பெருமைகளைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, மன ஒற்றுமை பலப்படவும், குழந்தைப் பேறு மற்றும் சகல பாக்கியங்களும் கிடைக்க இவ் விரதம் அருள்புரிகிறது.
credits -google

விரதம் இருக்கும் முறை
விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் பூஜை அறையைத் தூய்மை செய்து, சிவ-பார்வதி படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
உமாமகேசுவரரின் திருவுருவச் சிலையோ அல்லது படமோ வைத்து, சந்தனம், குங்குமம் சாற்றி, வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதத்தின் முக்கிய அங்கமாக, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் 16 முடிச்சுகள் போட்ட மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்வது வழக்கம்.
நாள் முழுவதும் உபவாசம் (பட்டினி) இருப்பது சிறந்தது. இயலாதவர்கள் பால், பழங்கள் மட்டும் அருந்தி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
மாலையில் சிவாய நம அல்லது “ஓம் உமாமகேஸ்வராய நம” என்னும் மந்திரத்தை உச்சரித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வழிபாட்டிற்கு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் அல்லது பழங்களை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
உமாமகேசுவர விரதத்தின் பலன்கள்
கணவன் – மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.குடும்பத்தில் வறுமை அகன்று, அமைதியும் செல்வ வளமும் பெருகும்.சந்தான பாக்கியம் (குழந்தைப் பேறு) இல்லாதவர்களுக்கு நல்ல மகப்பேறு கிடைக்கும்.தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, சிவபெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த உமாமகேசுவர விரதத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைப்பிடிப்பதன் மூலம் இல்லற வாழ்வு நல்லறமாக அமைந்து, வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சிவபெருமானின் அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும்.
மகாவிஷ்ணுவும் திருமகளை அடைய இந்த விரதத்தை அனுசிரித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

