திருப்பாவை திருவெம்பாவை 17 வது நாள்!
திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி மாதத்தில் 17 ஆம் நாள் பாடல் கண்ணன் பெருமையுடன் சிவபெருமான் மீது பக்தி கொண்டு வாழ்வில் மேன்மை அடைய பின்பற்றவும்.
திருப்பாவை – 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
விளக்கம்:
இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே சென்ற ஆண்டாள் நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், கிருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள்.
ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள். நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், அன்னம், தண்ணீர் என்று தானம் செய்கிறார்.
அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா! என்று அழைக்கிறாள் ஆண்டாள். ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே! எங்கள் குலத்தை விளக்க வந்த குலவிளக்கே! எம்பெருமானின் மனைவியான எம்பெருமாட்டியே! யசோதா! நீயும் எழுவாயாக.
மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, எழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்று கண்ணனை எழுப்புகின்றனர். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம் எழுந்திருப்பீர்களாக.
பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள் கோபியர்கள்.
மேலும் படிக்க : செவ்வாய் பகவானை வழிபடும் முறை. ஏன் வழிபட வேண்டும்..
திருவெம்பாவை – 17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!
விளக்கம்:
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப்படுத்தி, இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.
பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.
மேலும் படிக்க : நவக்ரஹ தோஷங்களை போக்க தேவிப்பட்டினம் செல்லுங்கள்