ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை, திருவெம்பாவை 11 ஆம் நாள் பாடல்கள்!

திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருப்போர் அனைவரும் பாடிவர இறைவன் அருள் கிடைக்கப் பெறும்.

திருப்பாவை -11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக!

ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்பதை நாங்கள் அறியோம் எழுந்துவா… பரந்தாமனை பாடித்துதிப்போம் என்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.

திருவெம்பாவை – 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம்:

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடையவனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே!

உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழி வழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். எம் தலைவனே… நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *