ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 13 ஆம் நாள் பாடல்!

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் மார்கழி நோன்பு இருக்கும் 30 நாட்களும் நாம் பக்தியோடு பாடும் பொழுது இறைவன் அருள்பார்வை பெறலாம். பெண்கள் மார்கழி மாதத்தில் தினம் எழுந்து நீராடி இறைவனை மனமுருகி பாடி பூஜை செய்து அவரை அருள் பெறலாம்.

திருப்பாவை – 13

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. கண்ணனை அழிக்க நினைத்த கம்சன் பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான்.

ஆண்டாள் நாச்சியார்

கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். இதைத்தான்”புள்ளின் வாய் கீண்டான் ” என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் ஆண்டாள் நாச்சியார்.

ராமர் பெருமை

அவ்வாறே ராமாவதார பெருமையை கூறுகிறார். இலங்கை அரசன் ராவணன் சீதையை கவர்ந்து சென்றான். அவனை வதம் செய்து சீதையை மீட்டவர் ராமர் அத்தகைய பெருமை உடைய நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

மேலும் படிக்க : திருப்பாவை திருவெம்பாவை பாடல் 25

வானத்தில் விடிவெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எழுந்து எங்களுடன் நீராட வா என்று படுக்கையில் இருக்கும் பெண்ணை எழுப்புகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

திருவெம்பாவை – 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம் :

நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன அவை அன்னை பார்வதியைப் போல உள்ளன. பூத்துள்ள செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் செந்நிற மேனியை நினைவுபடுத்துகின்றன. பறவைகளினால் பல தரப்பட்ட ஒலி உண்டாகிறது. உடலின் அழுக்கைப் போக்க பலர் நீராட வருகிறார்கள்.

இந்தப் பொய்கை எமது இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து அனைவரும் நீராடுவோம் என்று அழைக்கின்றனர் பெண்கள்.

மேலும் படிக்க : திருவெம்பாவை பாடல் 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *