ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 16 வது நாள் பாடல்கள்

மார்கழி 16 ஆம் நாள் பாவை நோன்பு இருந்து பாடும் பாடல்கள் எல்லாம் நாம் வளமான வாழ்வைத்தரும். பக்தி பொங்கும் மார்கழியில் இறைவழிபாடு செய்வோம்.

திருப்பாவை -16

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்.

விளக்கம்: கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீ நந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் வாயில் காப்பானை எழுப்புகிறார்கள். ஆயர்பாடியர்களான எங்களின் தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!

கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும் போது ஒருவரை தடுக்கக்கூடாது.

மேலும் படிக்க : அஷாட நவராத்திரி பூஜைமுறை..!!

திருவெம்பாவை – 16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து இந்த உலகத்தைக் காக்கும் உமையவளின் திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது அழகான சிற்றிடை போல மின்னி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளைப் போன்று இடை விடாது பொழிவாயாக என்று வேண்டுகின்றனர்.

மேலும் படிக்க : திருப்பாவை, திருவெம்பாவை 11 ஆம் நாள் பாடல்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *