ஆன்மிகம்ஜோதிடம்வாழ்க்கை முறை

ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்களுக்கும் (சுவாமிகள்), அவர்களுக்குத் துணையாக வீட்டில் விரதம் இருக்கும் பெண்களுக்கும் (மாளிகைப்புரத்தம்மாக்கள்) உரிய விரத முறைகள் தெளிவாக கொடுக்க பட்டுள்ளது

மாலை அணிந்து விரதம் இருப்பவர்களுக்கான நியதிகள்

பொதுவாகக் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 41 நாட்கள் (ஒரு மண்டலம்) கடுமையான விரதம் இருக்க வேண்டும்.

மாலை அணிதல்

குருசாமி கையாலோ அல்லது கோயிலில் அர்ச்சகர் மூலமாகவோ துளசி மணி அல்லது உருத்திராட்ச மாலையை அணிந்து கொள்ள வேண்டும்.

நீராடுதல் மற்றும் வழிபாடு

தினமும் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு சரண கோஷம் (‘சுவாமியே சரணம் ஐயப்பா’) சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

உடை மற்றும் தோற்றம்

நீலம் அல்லது காவி நிற வேட்டி-துண்டு அணிய வேண்டும். விரத காலத்தில் முடி வெட்டுவது, சவரம் செய்வது மற்றும் நகம் வெட்டுவது கூடாது. காலணி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உணவு முறை

முழுமையான சைவ உணவு (சாத்வீக உணவு) மட்டுமே உண்ண வேண்டும். பூண்டு, வெங்காயம், புகையிலை, மது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மட்டுமே முழு உணவும், இரவில் எளிய பலகாரம் அல்லது பால், பழம் உண்பதும் சிறந்தது.

ஒழுக்க நெறிகள்

பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். பாயில் அல்லது தரையில் படுத்து உறங்க வேண்டும் (மெத்தை, தலையணை தவிர்க்க வேண்டும்). கோபம், பொய், கடுஞ்சொல் பேசுவதைத் தவிர்த்து அனைவரையும் ‘சுவாமி’ என்றே அழைக்க வேண்டும்.

2. வீட்டில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்

மாலை அணிந்துள்ள கணவர், மகன் அல்லது குடும்ப உறுப்பினர்களின் விரதத்திற்குத் துணையாக வீட்டில் உள்ள பெண்களும் தூய்மையோடும் பக்தியோடும் விரதம் இருக்க வேண்டும்.

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாலை அணிவதற்கு முன்பே வீட்டை முழுமையாகத் துடைத்துச் சுத்தம் செய்து, பூஜை அறையைத் தயார் செய்ய வேண்டும்.

தினமும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வாசலில் கோலமிட்டு, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். காலையும் மாலையும் ஐயப்பன் பாடல்கள் அல்லது சரண கோஷங்களைச் சொல்லலாம்.

சமையல் நியதிகள்

மாலை அணிந்தவர்களுக்குச் சமைக்கும்போது மிகுந்த தூய்மையுடன் குளித்துவிட்டுச் சமைக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவருமே அசைவம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது விரதத்தின் புனிதத்தைக் காக்கும். சுவாமிக்குப் படைத்த பிறகே மற்றவர்கள் உணவு உண்ண வேண்டும்

நடத்தை மற்றும் பேச்சு

வீட்டில் அமைதியான சூழலைப் பேண வேண்டும். கோபப்படுவது, சண்டையிடுவது, புறம் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்து, வீட்டிற்கு வரும் ஐயப்ப பக்தர்களை அன்போடு உபசரிக்க வேண்டும்.

மாதவிடாய் கால நடைமுறை

இயற்கையான மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை அறைக்குச் செல்வதையோ, மாலை அணிந்தவர்களுக்குச் சமைப்பதையோ தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் சமைக்கலாம் அல்லது மாலை அணிந்தவர்களே சமைத்து உண்ணலாம்.

ஐந்து நாட்கள் கழித்துத் தலைக்குக் குளித்து வீட்டைச் சுத்தம் செய்த பின்னரே மீண்டும் பூஜை மற்றும் சமையல் பணிகளைத் தொடர வேண்டும்.

இருமுடி கட்டும் நாள்

யாத்திரைக்குப் புறப்படும் அன்று, இருமுடி கட்டுவதற்குத் தேவையான அரிசி, நெய், தேங்காய், அவல், பொரி போன்ற பொருட்களைத் தூய்மையாகத் தயார் செய்து கொடுத்து, ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று மனதார வழியனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *