மகளிர் தினத்தில் சிலேட்டுக்குச்சியின் தொலைக்காட்சி
தொலைக்காட்சி!!!
“காட்சியால் நம்மை தொலைக்க வைக்கும் தொலைக்காட்சியே!”
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தாய்மையை பெருமைப்படுத்தும் ஒரு தொடர் ஆரம்பிக்க இருப்பதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். “சோழியன் குடுமி சும்மா ஆடுமா” மார்ச் 8யிற்கான ஆரவாரம்.
உலக மகளிர் தினம்!!!
உலகமே மகளிருக்கு செய்யும் அநியாயத்தை அவ்வப்போது ஊடகங்களும் மக்களும் குறை கூறி பறைசாற்றி போராடி செல்கின்றனர். ஆனால் யாராக இருந்தாலும் பெண்களை மதிக்கத்தக்க மனிதனாக இருந்தாலும் சரி அவமானபடுத்தும் மனிதனாக இருந்தாலும் சரி மார்ச் 8-ஐ மறக்காமல் முகநூலிலும் மற்ற வலைதளத்திலும் எண்ணற்ற வாழ்த்துக்களும், புகழ்ச்சிகளும், பெண்மையை போற்றும் உணர்ச்சிகளும் பொங்கும் நாள். அது உண்மையா! போலியா!
இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? உன் வாழ்க்கையில் உனக்கு சக மனிதராக அமையும் பெண்மையை நீ போற்றாமல் வெறும் வெளியுலகத்திற்காக வலைதளத்தில் போற்றுவது ஏன்? இதனால் யாருக்கு என்ன லாபம்?
காலையில் கையில் தேநீர் கோப்பையுடன் உன்னை எழுப்பும் அம்மா! பின் உன்னை விளையாட்டுத்தனமாக சீண்டினாலும் உன்னோடு சேர்ந்து வாழும் தமக்கை! எல்லா விதத்திலும் உன்னை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் இரு வீட்டுப் பாட்டிக்கள்! வெளியுலகத்தில் உன்னோடு சேர்ந்து எல்லா சவால்களையும் சேர்ந்து அனுபவிக்கும் தோழி! முதல் கால்வாசி வாழ்க்கையை இவர்களுடன் வாழும் நீ மனைவி என்னும் பெண்மணியை சந்திக்கிறாய் அவளுடன் உன் வாழ்க்கையை பரிமாற ஒப்புக்கொள்கிறாய்.
இவ்வளவு பெண்மை நிறைந்த உன் வாழ்க்கையில் நீ அவர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு நிறைந்திருக்கிறாய் என்று நினைத்துப் பார்… உங்களுக்கு தொண்டு ஆற்றியே அவர்களின் வாழ்வு முடிகிறது என்று ஆண்கள் நினைப்பதுண்டா!
இப்படியும் சில ஆண்களுக்கு மத்தியில் நீ எவ்வாறு இருக்க வேண்டும்! தாயை முழுமுதற்கடவுளாக மதிப்பவராக, தமக்கைக்கு மற்றவரொரு தந்தையாக, பாட்டிகளின் செல்ல பேரனாக அன்பை வாரி வழங்கும் வள்ளலாக, தோழிக்கு எல்லாவற்றிற்கும் துணையாக, தாரத்திற்கு சக உரிமை கொடுத்து மதிப்பவராக, தாம் ஈன்றெடுத்த பிள்ளைக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களின் மீது நம்பிக்கை வரும் வண்ணம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
தங்களின் மதிப்பும் மரியாதையும் காதலுடன் கலந்து அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆண்கள் பெண்களை பட்டியலிட்டு வகை வகையாக ரகம் ரகமாக பிரிக்கையில் பெண்களோ தங்களை இரண்டே இரு வகையில் மட்டுமே பிரிக்கின்றனர் “மதிக்கத்தக்கவர்…”
“மதிப்பில்லாதவர்…”
இவ்வாறு பெண்கள் நினைக்க காரணம் ஆண்களின் செயல்கள். பதி என்பவர் வணங்கி போற்றத் தக்கவராயினும் அந்த பந்தத்தின் கடமையை ஆற்றத் தவறினால் அவருடைய மதிப்பு குறைகிறது. இவ்வாறு அனைத்து ஆண்களின் பந்தமும் எடை போடப்படுகிறது.
‘கொடுங்கள்! எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்ற கொள்கை இருக்கும் உலகத்தில் வாழும் நமக்கு பெண்ணிற்கான மதிப்பு கொடுக்கும் இடத்தில் ஆண்களுக்கும் மதிப்பு இருக்கிறது, அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்கும் இல்லை.