ரைஸ் வரைட்டிஸ் – 3
தாளித்த சாதத்தில் ஈஸியாக செய்வது இந்த முறைதான், இந்த பதிவில் தயிர் சாதம், தேங்காய் பால் சாதம், தேங்காய் சாதம் என்ன வகையில் செய்யலாம். வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தயிர் சாதம்
தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி அரை கிலோ கெட்டித்தயிர் 200 மில்லி, பால் 100 மில்லி வரை, நல்லெண்ணெய் 50, மிளகாய் நான்கு, சிறு மாங்காய் 1, கேரட் துருவல், மாதுளை உரித்தது, கொத்தமல்லி கட் செய்தது, ஒவ்வொன்றும் தலா ஒரு ஸ்பூன். உப்பு, கறிவேப்பிலை சிறிது தேவைக்கு ஏற்ப.
செய்முறை : புழுங்கலரிசி சேர்த்து நல்ல பதமாக வடித்து கொள்ளவும். அதில் கெட்டி தயிர், சிறிதளவு பால், ஆகியவற்றை விட வேண்டும். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி உப்பையும் சேர்த்துக் கலக்க வேண்டும். பச்சை மிளகாய், சிறு மாங்காய், துருவிய காய்கறிகள், இவற்றை பொடி பொடியாக நறுக்கிப் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு போட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். அதை உடனே சாதத்தில் கொட்டி நன்றாக கிளற தயிர் சாதம் ரெடி.
தேங்காய் பால் சாதம்
தேவையான பொருட்கள் : அரிசி அரை கிலோ, தேங்காய் ஒரு மூடி, நல்லெண்ணெய் 100 கிராம், பட்டை சிறு துண்டு, கிராம்பு, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை தேவைக்கு ஏற்ப.
செய்முறை : அரிசியைக் கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, அரிசியை போட்டு கிளறி, தேங்காய்ப் பால் ஊற்றி, 2 ரவுண்ட் விசில் வந்ததும், சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
தேங்காய் பாலும் தண்ணீரும் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு இருக்க வேண்டும்,
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள் : அரிசி அரை கிலோ, தேங்காய் அரை மூடி துருவியது, மிளகாய் வற்றல் 5, உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன், பெருங்காயப் பொடி தேவைக்கு ஏற்ப. வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப. உப்பு. தாளிக்க-எண்ணெய், கடுகு.
செய்முறை : அரிசியை சாதமாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வெடிக்க விடவும். அத்துடன் தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு நன்கு வறுபட்டதும், சாதத்தை சேர்த்து கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் தயார்.