சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்..!! சிதம்பரத்தில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, சத்துணவில் அழுகிய முட்டை சாப்பிட்டதால் மயங்கி விழுந்த பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் எனும் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை முட்டையுடன் சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும், அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
முட்டை அழுகியதால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது உணவால் ஏற்பட்ட பாதிப்பா என கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.