திருப்பாவை திருவெம்பாவை 19 ஆம் நாள் பாடல்கள்
ஆண்டாள் திருமால் மீது கொண்ட அன்பானது பக்தியுடன் இணைந்து வெளிப்படுகின்றது. மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாக பாவித்து பாடுகின்றார். சிவபெருமானின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றார்.
திருப்பாவை 19:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால் தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள்.
மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான பஞ்சு மெத்தை விரித்திருக்க அதில் கொத்துக் கொத்தாக மலர்களை தலையில் சூடிய நப்பின்னையை அணைத்தபடி படுத்திருக்கும் பரந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர்.
நப்பின்னை அன்பு மணாளன்
அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய்.
லோகமாதாவான உனக்கு இது சுபாவமில்லையே என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் “நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
திருவெம்பாவை – 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் ஆனால் இந்த பாவை நோன்பிருக்கும் பெண்களோ சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை என்கின்றனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா? எங்கள் தலைவனான இறைவனே, உன் கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற பழமொழியை திரும்பவும் கூறுகின்றனர்.
சிவபெருமானை பார்க்க தவம்
நாங்கள் உனக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும். உன் அடியவர்களை மட்டுமே திருமணம் செய்து அவர்களை மட்டுமே தழுவ வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றனர். இரவும் பகலும் எந்த நேரமும் எங்களின் கண்கள் உன்னை மட்டுமே பார்க்க வேண்டும். வேறு எதையும் பார்க்க கூடாது பார்க்க விரும்பவில்லை என்று கேட்கின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
இப்படி ஒரு வரத்தை நீ எங்களுக்கு அருள வேண்டும். அப்படி வரம் கொடுத்தால், சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை என்கின்றனர். மனித பிறவி எடுத்ததன்