Thirupugazh song 303 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் அதிரும் கழல் (குன்றுதோறாடல்
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.
பாடல் வரிகள்
அதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன்
அபயம் புகுவ தென்று …… நிலைகாண
இதயந் தனிலி ருந்து …… க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும்
இறைவன் தனது பங்கி …… லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து …… விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த …… பெருமாளே.
பாடல் விளக்கம்
ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது
அடிமையாகிய நான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின்
திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும்
இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.