Thirupugazh song 289 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 289 மருக்குல மேவும் ( திருத்தணிகை )
கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது. பாடல் தலைவனை (முருகனை) பிரிந்த தலைவியின் வருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
பாடல் வரிகள்
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் …… நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் …… திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் …… பிலிமூகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் …… சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் …… நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் …… மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் …… டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் …… பெருமாளே.
பாடல் விளக்கம்
வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும்,
கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான்
உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், மாறாக லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், உனது திருத்தணிகைத் தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு,
இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய்.
குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், மாவலி சக்கரவர்த்தி இடம்
வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் இருக்கும் இடத்தை குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி
தேவி வாசம் செய்யும் மார்பன், சத்துவம், ராஜதம், தாம ம் ஆகிய முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே,
குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில் நாள் தோறும் பல திசைகளில்
இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே…