திருப்புகழ் பாடல் – 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)
நமது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அளவற்ற அன்பையும் அழகையும் அறிவையும் உடையும் முருகப்பெருமானின் புகழ் பாடுவது ஆகும். திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகப்பெருமானின் அருள் பெறுவோம். மேலும் அவரது வீரத்தையும் புகழையும் பற்றி அறிந்து கொள்வோம்.
தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான
பாடல்
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு …… நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு …… மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற …… அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென …… வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர …… அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் …… இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.
விளக்கவுரை
கரிய நிறத்தில் மையினைப் பூசிய இரண்டு
கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழிந்து விடும் படி எறிகின்ற
பொழுது, ஒரு பழத்தின் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற
இணையில்லாத ன்னகையாலே,
கழுத்தில் நின்று எழுகின்ற வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள்
என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை
கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய்,
மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்
மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை
எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,
கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல்
குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும்
விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்
புரிவாயே.
நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும்,
வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த
அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும்,
மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய
கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய
கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச்
சொரிய வெட்டித் துணித்த தீரனே,
ஒளியும் கருமையும்
கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த
மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற
விநாயகருடன் வரும் தம்பியே,
கோபத்துடன் யமனை உதைபட வைத்த
சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச்
சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே.