ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை 217 பாடலில் சுத்திய நரப்புடன்

திருப்புகழ் சுவாமிமலை 217 ஆம் பாடலில் சுத்திய நரப்புடன் பாடல் அமைந்துள்ளது. கந்தன் திருவுள்ளத்தில் சரண் அடைய அவர் நாமம் பாடி சரணாகதி அமைப்போம்.

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் …… சங்குமூளை

துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக …… வங்கமூடே

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் …… பஞ்சபூதம்

எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் …… மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள …… மண்டியோடச்

சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட …… வென்றவேலா

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட …… னங்கொள்வேளே

செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் …… தம்பிரானே.


விளக்கம்

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு …
சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல்
இவற்றுடன்,

அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை … நீர்,
கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இருதயம்,

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் … இந்திரியம்,
விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள்,

மயிர் சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை … ரோமம், சங்கு
போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய்,

அல் கறை முனை பெருகு குட்டமொடு … மாதவிடாய் முதலிய
மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய்,

விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி … சிலந்தி, புண் புரை
வைத்தல், முட்டு வலி,

துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக … புசிக்கின்ற
ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர,

அங்கம் ஊடே எத்தனை நினைப்பையும் விளைப்பையும்
மயக்கம் உறல்
 … உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள்,
மயக்கங்கள்,

எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை … எத்தனை
வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும்,

எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில்
பஞ்ச பூதம்
 … எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து
பூதத்தாலாகிய உடலிலே,

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை … எத்தனை
குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை,

மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை 212 காமியத் தழுந்தி

எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் … எத்தனை
கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை,

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில்
மங்குவேனோ
 … எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து
(நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ?

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை … தத்தனத
னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும்,

ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள் சத்தம் அறைய …
ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள்
பேரொலி செய்யவும்,

தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள மண்டி ஓட … கூட்டமாய்
வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும்,

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப … ஆதிசேஷனாகிய
பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும்,

அமரர் கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என …
தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று
முழங்கவும்,

சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா …
சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி
கொண்ட வேலனே,

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன் அழித்து …
உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே
அழித்து,

கமலத்தனை மணிக் குடுமி பற்றி … தாமரையில் வீற்றிருக்கும்
பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து

மலர்ச் சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள்
வேளே
 … (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக்
குட்டி நடனம் கொண்ட தலைவனே,

செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்
பெண்
 … செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப்
பெண்ணாகிய வள்ளியின்

அமளிக்குள் மகிழ் செட்டி … படுக்கையில் மகிழும் செட்டியே,

குரு வெற்பில் உறை சிற் பரமருக்கு … சுவாமி மலையில்
வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு

ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற
குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *