ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 213 குமரகுருபர முருக குகனே

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 213 இல் குமரகுருபர முருக குகனே என பக்தர் முருகரை சரண் அடைதலை குறிக்கின்றது. கந்தக்கடவுள் அப்பன் சிவனுக்கு குருவாய் பாடம் சொன்னவர், வள்ளியின் கணவன், சூரனை அழித்தவர் இத்தகைய பெருமையுடைய முருகரை பின்பற்றி சரணம் என இருக்க இப்பாடல் எடுத்துரைக்கிறது.

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
     கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
          குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு …… முருகாதே

குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
     தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
          கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க …… ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
     முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
          தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
     வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
          தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் …… தருவாயே

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
     தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
          தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு …… செருமீதே

தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
     ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
          தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் …… பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
     வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
          திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு …… முருகோனே

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
     லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
          சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை …… பெருமாளே.

விளக்கம்

குமர குருபர முருக குகனே குறச் சிறுமி கணவ சரவண …
குமரனே, குருவான மேலோனே, முருகனே, குகனே, குறப்
பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சரவணனே,

நிருதர் கலகா பிறைச் சடையர் குரு என நல் உரை உதவு
மயிலா எனத் தினமும் உருகாதே
 … அசுரர்களைக் கலக்கியவனே,
பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானுடைய குருவாக அமைந்து
சிறந்த உபதேச மொழியைப் போதித்த மயில் வாகனனே, எனக் கூறி
நாள் தோறும் நான் மனம் உருகாமல்

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் …
குயிலைப் போன்ற பேச்சுக்களை உடைய அழகிய விலை மகளிர், கண்
பார்வையால் மனதை உருக்குபவர்கள்,

தெருவில் அநவரதம் அ(ன்)னம் எனவே நடப்பர் … தெருவில்
எப்போதும் அன்னம் போல நடப்பவர்கள்,

நகை கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே
பறிப்பவர்கள்
 … (தம்மைப்) பார்த்து மகிழ்பவர்களுடைய பொருளையும்
மனதையும் உடனே அபகரிப்பவர்கள்,

அனைவோரும் தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள் …
யாவரும் தமது வசத்தில் அகப்படும்படி வசீகரித்து முகத்தை
மினுக்குபவர்கள்,

முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் …
(வேண்டுமென்றே) மார்பகங்கள் மீதுள்ள துணியைச் சரிய விட்டு
நடுத் தெருவில் நிற்பவர்கள்,

தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் … பொருள்
இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் புண்படுமாறு நழுவியும்
மழுப்பியும் செல்பவர்கள்,

கண் வலையாலே சதி செய்து அவர் அவர் மகிழ அணை மீது
உருக்கியர்கள்
 … கண் வலையால் (அவர்களுக்கு) வஞ்சனை செய்தும்,
அவரவர் கொடுத்த பொருளுக்குத் தக்கபடி மகிழ்ச்சியுற படுக்கையில்
உருக்குபவர்கள்,

வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட தொழில் தனில்
உழலும் அசடனை
 … ஆகிய விலைமாதர்களின் வசத்தே ஒழுகி,
அவர்களின் அடிமையைப் போல அந்த மாதர்கள் இட்ட தொழிலில்
திரிந்து உழலும் முட்டாளாகிய என்னை

உன் அடியே வழுத்த அருள் தருவாயே … உனது திருவடியைப்
போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக.

சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது …
போர் செய்யக் கருதி அசுரர்களின் சேனை போர்க்களத்தில் எதிர்த்து
வந்து போது,

ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து அவனி
தனில் நிருதர் சிரம் உருள ரண தூள் படுத்திவிடு செரு
மீதே
 … ஒரு நொடிப் பொழுதில் அவர்களுடைய சேனை அழிய
வேலாயுதத்தைச் செலுத்தி, பூமியில் அசுரர்களுடைய தலைகள்
உருண்டு விழும்படி தூள்படுத்திவிட்ட போர்க்களத்தில்

தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர
நிணமொடு குருதி குடி காளி கொக்கரி செய்
 … தாகத்துடன்
பேய்கள் கூத்தாடவும், வீரபத்திரர்கள் (சிவ கணங்கள்) ஆரவாரம்
செய்யவும், கொழுப்புடன் இரத்தத்தைக் குடிக்கின்ற காளி
கொக்கரிக்கவும்,

தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள்
பலகோடி திமிதமிட
 … சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி
கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில்
பேரொலி எழுப்பவும்,

நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல
ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர
 … நரிகள், காகங்கள்,
கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள்
சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞான
இருளைப் போக்கும் சூரியனே,

அமரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே … தேவர்கள்
அரசனான இந்திரன் பொன்னுலகைப் பெற்று உலவ உதவிய
முருகோனே.

திரு மருவு புயன் அயனொடு அயிராவதக் குரிசில் அடி
பரவு
 … லக்ஷ்மி மருவுகின்ற தோள்களை உடைய திருமாலும்,
பிரமனும், ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனும் வந்து வணங்குகின்ற

பழநிமலை கதிர்காமம் உற்று வளர் சிவ சமய அறுமுகவ …
பழனி மலையிலும், கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ
சமயத்தவனே, ஆறுமுகனே,

மேலும் படிக்க : திருப்புகழ் 143 கனமாய் எழுந்து (பழநி)

திருவேரகத்தில் உறை பெருமாளே. … சுவாமி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *