ஆன்மிகம்

திருப்புகழ் 33 இருள்விரி குழலை (திருச்செந்தூர்)

இப்பாடலில் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் ஆகும். இப்பாடலை படித்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்.

பாடல் வரிகள்:

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
     மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
          மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு …… மைந்தரோடே

இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
     மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
          மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு …… மெங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
     விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
          வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு …… நிந்தையாலே

வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
     மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
          வசைவிட நினது பதத்தைப் போற்றுவ …… தெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
     கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
          குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய …… மண்டுநீரூர்

குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
     திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
          குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை …… வண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
     விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
          முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு …… செந்தில்வாழ்வே

முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
     சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
          முறையருள் முருக தவத்தைக் காப்பவர் …… தம்பிரானே.

சொல் விளக்கம்:

இருள் விரி குழலை விரித்துத் தூற்றவும் … கருமையாக இருண்டு
விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும்,

இறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவும் … இறுக்கக் கட்டிய
ஆடையை தளர்த்திக் காட்டவும்,

இரு கடை விழியும் முறுக்கிப் பார்க்கவும் … இரண்டு விழிக்
கடைகளாலே செருக்குடன் பார்க்கவும்,

மைந்தரோடே இலை பிளவு அதனை நடித்துக் கேட்கவும் …
ஆண் மக்களோடு வெற்றிலையையும் வெட்டுப் பாக்கையும் நடிப்புடன்
கேட்கவும்,

மறு மொழி பலவும் இசைத்துச் சாற்றவும் … மறு மொழிகள்
பலவற்றை இணக்கத்துடன் சொல்லியும்,

இடை இடை சிறிது நகைத்துக் காட்டவும் … இடையிடையில்
சற்று புன்னகை செய்து காட்டியும்,

எங்கள் வீடே வருக என ஒரு சொல் உரைத்துப் பூட்டவும் …
(இது) எங்கள் வீடு தான் வருக என்று ஒரு சொல்லைச் சொல்லி
வளைத்து மாட்டுவித்தும்,

விரி மலர் அமளி அணைத்துச் சேர்க்கவும் … விரிந்த மலர்ப்
படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும்,

வரு பொருள் அளவில் உருக்கித் தேற்றவும் … வந்த
பொருளுக்குத் தக்க படி உருக்கம் காட்டி சரசமாடியும்,
நிந்தையாலே வனை மனை

புகுதில் அடித்துப் போக்கவும் … (பின்னர்) நிந்தை மொழி
கூறி அலங்கரிக்கப்பட்ட வீட்டில் நுழைந்தால் அடித்து விரட்டவும்,

ஒரு தலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசை விட
நினது பதத்தைப் போற்றுவது எந்த நாளோ
 … ஒரு தலைக்
காமத்தினராகப் (தம் இச்சைப்படி) புணரும் கொடிய வேசியர்களின்
பழிப்பு நீங்க உனது திருவடியைப் போற்றுவது எந்த நாளோ?

குரு மணி வயிரம் இழித்துக் கோட்டிய கழை மட உருவு
வெளுத்துத் தோற்றிய
 … நிறமுள்ள வைர மணிகளை அடித்துத்
தள்ளி, வளைந்த இள மூங்கிலின் உருவம் வெளுத்துத் தோற்றுப்
போம்படியான வெண்மையையும்,

குளிறு இசை அருவி கொழித்துத் தூற்றிய மண்டு நீர்
ஊர்
 … ஒலிக்கின்ற இசையை உடைய சிற்றாறு ஒதுக்கி இறைக்க,
பெருகிய நீர் பாய்கின்ற

குழி படு கலுழி வயிற்றைத் தூர்த்து எழு திடர் மணல் இறுகு
துருத்திக் காப் பொதி குளிர் நிழல் அருவி கலக்கிப் பூப்
புனை வண்டல் ஆடா
 … ஆழம் படுகின்ற காட்டாற்றின் மத்தியில்
அடைபட்டு எழுந்த மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினுள்ள
சோலையின் அடர்ந்த குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும்,
பூப்புனைந்தும், மகளிர் விளையாடியும்,

முருகு அவிழ் துணர்கள் உகுத்துக் காய் தினை விளை நடு
இதணில் இருப்பைக் காட்டிய
 … மணம் வீசும் பூங்கொத்துக்களை
விட்டு கதிர் விடும் தினை விளையும் புனத்தின் நடுவில் உள்ள
பரணின் மீது தான் இருத்தலைக் காட்டிய

முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே …
அரும்பும் மார்பகங்களை உடைய இளைய குறப் பெண்ணாகிய
வள்ளிக்கு ஆட்பட்ட திருச்செந்தூர்ப் பெருமாளே,

முளை இள மதியை எடுத்துச் சாத்திய சடை முடி இறைவர்
தமக்குச் சாத்திர முறை அருள் முருக
 … முளைக்கின்ற இளம்
பிறையை எடுத்துச் சூடிய சடாபாரம் தாங்கிய சிவபெருமானுக்கு
சாத்திர முறையை ஓதி அருளிய முருகனே,

தவத்தைக் காப்பவர் தம்பிரானே. … தவ நிலையைக் காக்கும்
முனிவர்களுடைய பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *