திருப்புகழ் 148 குழல்கள் சரிய (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் மன சங்கடங்கள் நீங்கும்.
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ …… களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி …… னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய …… மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் …… உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் …… அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி …… யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ …… முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள்
செயவெ களவோடே குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில்
ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற … கூந்தல் சரியவும், பேச்சு
பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு
எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில்
(புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும்,
இள நிர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும்
இடையும் அசைய மயில் போலே இனிய அமுத ரசமும் வடிய
உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ … இளநீர் என்று
சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும்
இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து)
இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய
துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ?
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி
சொல் அணிவோனே … விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும்
அருணகிரி* என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை
போன்ற புகழ் மாலையை அணிபவனே,
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி
அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள்,
இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம்
உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே,
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும்
உடையோனே … பழைமையான வேத முடிவில் பிரணவத்தை
(அ+உ+ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே,
மேலும் படிக்க : இறைநெறி குறித்த சர்ச்சையா முருகா உன்னையும் விட்டு வைக்கலயாப்பா
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு
பெருமாளே. … நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும்,
வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.