திருப்புகழ் 121 உயிர்க் கூடு (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் வீட்டில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை …… யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ …… ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் …… விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை …… வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி …… மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் …… தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி …… யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
உயிர்க் கூடு விடும் அளவும் உ(ம்)மைக் கூடி மருவு
தொழில் … உயிரானது இந்த உடம்பை விட்டுப் பிரிகின்றவரை
உம்மைக் கூடியிருக்கும் தொழிலை
ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் உரைத்தே …
ஒருக்காலும் நழுவ விட மாட்டேன் என்று சபதம் செய்து,
முன் மருவினரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய்
பின் வருகும் அவர் எதிரே போய் … முன்பு தாம் சேர்ந்திருந்த
ஆடவர்களை வெறுத்து விலக்கி, பொன் முதலிய பொருள்களை
அடையப் பெற்று, பின்னர் வருபவர்களின் எதிரில் சென்று,
பயில் பேசி இரவு பகல் அவர்க்கான பதமை பல படப் பேசி
உறு பொருள் கொள் விலைமாதர் … ரகசிய வார்த்தைகளைப்
பேசி, அவர்களுக்கு விருப்பமானச் சொற்களைப் பலவாறு கூறி,
அவர்களிடம் உள்ள பொருளைக் கொள்ளை கொள்ளும் பொது
மகளிர்கள்
படப் பார வலை படுதல் தவிர்த்து ஆள … காட்டும் பருத்த அங்க
அவயவங்களாகிய வலையில் வசப் படுதலை தவிர்த்து என்னை
ஆண்டருள,
மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் …
மணிகள் புனைந்த பாதங்களையுடைய மயிலின் மேல் வந்தருள
வேண்டும்.
தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ
வனிதையர்கள் தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே …
தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற
கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே,
தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்
தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே … (சம்பந்தரின் திருநெறித்
தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி,
திருவிடை மருதூர், வேதரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய
தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே,
செயில் சேல் விண் உடுவினொடு பொரப் போய் வி(ம்)மு
அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே …
வயல்களில் உள்ள சேல் மீன்கள் ஆகாயத்தில் உள்ள
நட்சத்திரங்களுடன் போரிடச் சென்று, மிக்கு எழும் போரைப் புரிந்து
வெற்றி பெற்றுத் திரும்பி ஓடி வரும் பழனியில் வீற்றிருப்பவனே,
தினைக் காவல் புரியவல குறப் பாவை முலை தழுவ திரு
தோள அமரர் பணி பெருமாளே. … தினைப் புனத்தைக் காவல்
புரிய வல்ல குறவர் மகளான வள்ளியின் மார்பைத் தழுவும் திருத்
தோளனே, தேவர்கள் தொழுகின்ற பெருமாளே.
மேலும் படிக்க : சிவபுராண உபன்யாசம் வீட்டிலேயே கண்விழித்து பூஜைகள் செய்து வழிபட..!!