ஆன்மிகம்

திருப்புகழ் 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். … திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.

பாடல் வரிகள்:

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
     நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
          கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு …… நகையாலே

களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
     மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
          கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
     அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
          நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு …… மிடறூடே

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
     இசைத்து நன்கொடு மனமது மறுகிட
          நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற …… அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
     உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
          நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென …… வரைபோலும்

நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
     சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
          நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர …… அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
     புழைக்கை தண்கட கயமுக மிகவுள
          சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் …… இளையோனே

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
     பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
          திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

சொல் விளக்கம்:

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி
நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை
அமுது உகும் ஒரு சிறு நகையாலே
 … கரிய மையிட்ட இரண்டு
கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும்
பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற
ஒப்பற்ற புன்னகையாலே,

களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு
எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட
மனை தனில் அழகொடு கொடு போகி
 … கழுத்தில் நின்று
எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள்
என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை
கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய்,

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த
அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட
அமுது இதழ் பருகியும்
 … மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்
மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை
எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,

மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து
நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள்
துயர் அற அருள்வாயே
 … கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல்
குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும்
விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்
புரிவாயே.

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த
கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு
கிடு கிடு என
 … நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும்,
வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த
அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும்,

வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக்
கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு
குருதிகள் சொரி தர அடுதீரா
 … மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய
கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய
கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச்
சொரிய வெட்டித் துணித்த தீரனே,

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண்
கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன
கணபதியுடன் வரும் இளையோனே
 … ஒளியும் கருமையும்
கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த
மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற
விநாயகருடன் வரும் தம்பியே,

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம்
அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை
சரவண பெருமாளே.
 … கோபத்துடன் யமனை உதைபட வைத்த
சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச்
சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *