திருப்புகழ் 189 மூல மந்திரம் பழநி
முருகரின் பெயரை கூப்பிட்டு நாம் முழுமையாக சரணாகதி அடைதல் வேண்டும். சரவணபவ என்ற மந்திரசொல் ஒன்றே நம்மை என்றும் நிலைக்கச் செய்யும் மூலமந்திரமாகும்.
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை …… மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் …… பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட …… நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் …… புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு …… ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு …… முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி …… குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் …… பெருமாளே.
விளக்கம் ………
மூல மந்திரம் ஓதல் இங்கிலை … மூல மந்திரமாகிய ஆறெழுத்தை
(சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது.
ஈவது இங்கிலை நேயம் இங்கிலை … கொடுத்தல் என்பதும் அன்பு
என்பதும் என்னிடம் கிடையாது.
மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை … மெளனநிலை என்பதோ
ஞானம் என்பதோ இங்கே கிடையாது.
மடவார்கள் மோகம் உண்டு … பெண்களின் மேல் மோகம் என்பது
உண்டு.
அதி தாகம் உண்டு … அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு.
அபசாரம் உண்டு … அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு.
அப ராதம் உண்டு … அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய
தண்டனையும் உண்டு.
இடு மூகன் என்றொரு பேரும் உண்டு … எல்லோரும் எனக்கு
இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு.
அருள் பயிலாத கோலமும் … அருளில் பயிற்சி இல்லாத
விளையாட்டுக்கோலமும்,
குண வீன துன்பர்கள் வார்மையும் … குணக்கேடான
துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும்
பல வாகி … வெகுவாகப் பெருகி,
வெந்தெழு கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி … வெந்து
எழுகின்ற கோரமான கும்பி* என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு
கொண்டு,
கூடு கொண்(டு) உழல்வேனை … இந்தக் கூடாகிய உடலைச்
சுமந்து திரிகின்ற என்னை
அன்பொடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு … அன்புடன்
ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும்
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே … புத்தி கூர்மையைத்
தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக.
பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து … மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள
கமண்டல நீரும் கொதித்து**
அவ் அசோகு வெந்து … (நோயைக் குறைக்க வீசிய) அசோகக்
கொழுந்தும் வெந்து,
அமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட … (அந்த
அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள்
நெஞ்சிலே பயம் அடையுமாறு
வாது கொண்டு அருள் எழுது ஏடு … அவர்களோடு வாது செய்து
(அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட … யாவரும் போற்ற அங்கு
எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும்,
மாறனும்பிணி தீர … பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்)
நோய் தீர்ந்து நலம் பெறவும்,
வஞ்சகர் பீறு வெங்கழு வேற … வஞ்சகச் சமணரும் உடல்கிழிய
கழுமரத்தில் ஏறவும்,
வென்றிடு முருகோனே … வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக
அவதரித்த முருகப் பெருமானே,
ஆல முண்டவர் சோதி யங்கணர் … நஞ்சை உண்டவரும்,
முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும்,
பாக மொன்றிய வாலை … ஆகிய சிவபெருமானின் பாகத்தில்
பொருந்திய குமரி,
மேலும் படிக்க : திருப்புகழ் 181 மருமலரினன் (பழநி)
அந்தரி ஆதி யந்தமுமான சங்கரி … பராகாச வடிவி, முதலும்
முடிவுமாக நிற்கும் சங்கரியின்
குமரேசா … புதல்வனான குமரக் கடவுளே, என்று கந்தகுமாரக்கடவுளைப்பாடும் பாடல்