சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷலாக கோழி பிரியாணி.!

சண்டே ஸ்பெஷலாக இன்று கோழி வைத்து பிரியாணி எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.

கோழி பிரியாணி

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி ஒரு கிலோ, கோழிக் கறி முக்கால் கிலோ, பெரிய வெங்காயம் கால் கிலோ, தக்காளி 150 கிராம், தேங்காய் பால் சேர்ப்பது என்றால் முற்றிய தேங்காய் ஒன்று, எலுமிச்சை பழம் ஒன்று, நெய் 300 கிராம், தயிர் 100 கிராம், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு.

மசாலா அரைக்க : புதினா இலை ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் 4, மிளகு 2 ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு 2 டீஸ்பூன், பட்டை சிறிய துண்டு, கிராம்பு 4, இஞ்சி 100 கிராம், பூண்டு 100 கிராம், சின்ன வெங்காயம் 150 கிராம், மிளகாய்த் தூள் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

தாளிக்க : புதினா இலை, கறிவேப்பிலை, மல்லி தலை, முந்திரி பருப்பு ஐம்பது கிராம்,

செய்முறை : மசாலா சாமான் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். தேங்காய் பால் ஊற்றுவது என்றால் பால் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மசாலா சாமானுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வெங்காயம், தக்காளி நீளவாக்கில் நறுக்கி வைத்து விடுங்கள்.

பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வையுங்கள். பிரியாணி செய்வதற்கு முன் அரிசியைப் போட்டு விட்டு தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க சாமானை போட்டு கிளறி, புதினா இலை, கறிவேப்பிலை போட்டு, முந்திரியையும் போடவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலாவையும் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். கோழிக் கறியை மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு இந்த கோழிக்கறியை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தயிர் சேர்த்து நன்றாக வதங்க விட்டு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு மூடி வைக்க வேண்டும்.

அரிசியும் நன்றாக சேர்ந்து வந்தவுடன் நெய் சேர்த்து கிளறி வேக விட வேண்டும். தேங்காய் பால், தேங்காய் பாலுடன் தண்ணீர் அளவை சேர்க்க வேண்டும். பிரியாணி தயார் ஆன உடன் இறக்கி வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து நெய் சேர்த்து கிளறி, புதினா, கொத்தமல்லி தூவி, புதினா தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

சிறிதளவு கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து பிரியாணி வேகும் போது ஊற்றினால் பிரியாணி கலராக இருக்கும்.

தயிர் பச்சடி : நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு பரிமாறுவதற்கு முன் தயிர் ஊற்றி, மாதுளம் பழம் உதிர்த்து போட்டு, கொத்தமல்லி தழை தூவி பிரியாணியுடன் பரிமாறலாம். சுவையான கோழி கறி பிரியாணி தயார். பிரியாணியை தம் கட்டி செய்யலாம் அல்லது குக்கரில் விசில் போட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *