ஆன்மிகம்ஆலோசனை

ஸ்ரீசைலம் இரண்டாவது ஜோதிர்லிங்கம்

எம்பெருமான் ஜோதிர் லிங்கங்களாக 12 தலங்களில் அருள்புரிகிறார். ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் இரண்டாவது தலமாக ஶ்ரீசைலத்தை காண உள்ளோம்.

"கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றான் எனவருள் ஈசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே"
          -சம்பந்தர்

ஸ்ரீசைலம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து மகிழுந்து போன்றவற்றால் சாலை போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பக்கத்திலுள்ள விமான நிலையம் ஹைதராபாத் மற்றும் இரயில் நிலையம் பல உள்ளன அவரவர் புறப்படும் இடத்தை பொருத்து ரயில் போக்குவரத்து அமையும். முக்கியமாக மர்காப்பூர் இரயில் நிலையத்தை குறிப்பிடுகின்றனர்.

ஶ்ரீசைலம் பற்றி பல வரலாற்று கதைகள் உள்ளன. அதில் சில அக்கமகாதேவி, சந்திரவதி போன்றவர்கள் இத்தலத்தின் லிங்க வழிபாட்டால் எம்பிரானின் பரமானுகிரகம் பெற்றுள்ளனர். ஆனால் எம்பிரானின் தோற்றத்திற்கான வரலாறாக இரு கதைகளை கூறுகிறது புராணங்கள்.

ஸ்தல வரலாறு

சிவ மஹாபுராணத்தில் கூறப்படும் கதை:

திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் தம் புதல்வர்களான விநாயகர் முருகன்; இவர்களில் யாருக்கு முதலில் திருமணம் செய்வது என உரையாடிக்கொண்டிருந்தனர். மிகுந்த நேர உரையாடலுக்கு பின் போட்டி வைத்து முடிவு எடுக்கலாம் என்று தீர்மானித்தனர்.

‘இவ்வுலகத்தை யார் முதலில் மூன்று முறை வலம் வருகிறீர்களோ அவருக்கே முதலில் திருமணம்’ என்று சிவபெருமான் கூறிய அடுத்த நொடி முருகன் மயிலில் பறந்தார். விநாயகரோ எம்பிரானையும் அன்னையையும் சுற்றி வந்தார். அதை கண்ட ஈசன் ‘என்ன செய்கிறாய்’ என்று வினவ ‘நீங்கள் இருவரும் யார்? இந்த உலகிற்கே அம்மை அப்பனாக விளங்குபவர் தங்களை சுற்றி வந்தால் உலகத்தை சுற்றி வந்த பலன் தானே!’ என்ற வினாவுடனே பதிலளித்தார். தெய்வீக புன்னகையுடன் அம்மை அப்பன் இருவரும் ஆமோதித்தனர். விநாயகர்க்கே முதலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அப்பொழுது நம் தமிழ் கடவுள் வருகிறார், நடந்ததை அறிகிறார், சினம் கொண்டு யார் சொல்வதையும் கேளாமல் புறப்பட்டு கிரௌஞ்ச மலை அடைந்தார். முருகனின் கோபத்தை போக்குவதற்காக எத்தனையோ விதமாக கேட்டுக்கொண்டும் எம்பிரான் பயனில்லாததால், அவர்களும் தங்கள் குமாரனுக்காக அருகிலுள்ள சிகரத்தின் மீது லிங்க சுவருபமாக வீட்டு இருக்க இதுவே ஶ்ரீசைலம் ஆகுகிறது.

மற்றொரு புராணத்தில் கூறப்படும் கதை:

சிலாத முனிவர் எம்பிரான் மீது பிள்ளைப்பேறு வேண்டி கடும் தவம் புரியலானார். சிவபெருமானும் அவரின் தவத்தை மெச்சி நேரில் தோன்றி வேண்டும் வரத்தை கேட்கும் படி கூறினார். முனிவரும் உன் மேல் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இரு பிள்ளைகளை அருளுமாறு வேண்டினார். அவ்வாறே அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு பிள்ளைகளும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். இருவரும் தக்க வயதானவுடன் அவரவர் தவ வாழ்க்கையை மேற்கொள்ள தொடங்கினார்கள். தவம் வெற்றி பெற சிவபெருமான் காட்சியளித்தார். இருவரும் தம் மீது வீற்றிருந்து அருள்பாளிக்க வேண்டும் என வேண்டினார்கள். நந்தி “நந்தி மலை” ஆனார்; மஹாநந்தி என அழைக்கப்படுகிறது. பர்வதன் “ஶ்ரீ மலை” ஆனார்; அதுவே ஶ்ரீசைலம் ஆயிற்று.

மூலவர்: மல்லிகார்ஜுனர்

மேலும் படிக்க : பக்தி இல்லா ஞானம் குப்பை

பெயர்காரணம்

ஶ்ரீதேவி தாயார் இத்தலத்தில் தவமிருந்து வரம் பெற்றதால் ஶ்ரீசைலம் எனப்பட்டது.

பஞ்ச பாண்டவர்கள் இத்தலத்தை சுற்றி வாழ்ந்துள்ளார்கள். ‘அர்ஜுன’ என்றால் ‘மருத மரம்’ என்று பொருள். மருத மரங்களும் மல்லிகை செடிகளும் நிறைந்து காணப்பட்ட தலம் இது ஆகையால் மல்லிகார்ஜுனம் என்று அழைக்கபட்டதோடு இத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பிரானுக்கும் மல்லிகார்ஜுனர் எனவும் தொழப்படுகிறார்.

ஒன்பது சிகரங்கள், ஒன்பது புண்ணிய ஆறுகள், ஒன்பது நகரங்கள், ஒன்பது குகைகள், ஒன்பது தூய நன்னீர் கிணறுகள் என காணப்படும் இவ்விடத்தின் இதயமாக விளங்கும் இத்தலம் ஶ்ரீசைலம், மல்லிகார்ஜுனம், ஶ்ரீபர்வதம், ஶ்ரீகிரி, ஶ்ரீநாகா என்று புராணங்கள் புகழ்கிறது.

சிறப்பம்சம்

ஶ்ரீசைலம் சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

இங்கே புல்லாங்குழல் இசைக்கும் விநாயகர் உள்ளார்.

முருகன் திருமணமாகாதவராகவும், விநாயகர் திருமணமானவராகவும் இத்தலத்தில் ஆசிபுரிகின்றனர்.

அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *