ஆன்மிகம்ஆலோசனை

கைமேல் பலன் கிடைக்க சத்தியநாராயண பூஜை வழிபடும் முறை..

சத்தியநாராயணன் பூஜை சந்திரன் பலம் உள்ள நாளில் பௌர்ணமி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பௌர்ணமி அன்று செய்ய முடியாதவர்கள் இந்த பூஜையை புரட்டாசி மாத சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள், வெள்ளி, தீபாவளி, அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி போன்ற தினங்களில் செய்யலாம். இந்த பூஜையை புரோகிதரை வைத்து செய்வார்கள். பூஜையின் விசேஷம் என்னவென்றால்? ஸ்ரீ சத்ய நாராயணரே, நாரதரிடம் மனிதர்கள் தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய் மொழியாக குறிப்பிட்டுள்ளார்.

இதை முறையாக கடைபிடித்தால்

ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார். இவர்களின் துன்பத்தைப் போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்ட போது கலியுகத்தில், சத்தியநாராயண விரதம் பலன் அளிக்கக்கூடியது. ஒருவர் இதை முறையாக கடைபிடித்தால் வாழ்வில் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்று கூறினார். மேலும் இந்த ஸ்ரீ சத்யநாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் செய்தால் மிகவும் நல்லது.

மகாவிஷ்ணுவின் அவதாரம்

பௌர்ணமி அன்று மாலை பொழுதில் சந்திரோதய காலத்தில் பூஜை செய்வது மிகவும் உசிதம். சத்யநாராயணர் மகாவிஷ்ணுவின் அவதாரம். அவர் பெயருக்கு ஏற்றார் போல் சத்தியம் ஆனவர். நம்பிக்கையுடன் பூஜை செய்தால் கண்டிப்பாக கைமேல் பலன் கிடைக்கும். சத்தியநாராயண பூஜை செய்பவர்கள் பகவானின் அருளைப் பூரணமாகப் பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவார்.

மஹாலட்சுமியின் நாயகர்

மகாவிஷ்ணுவின் திருப்பெயரை ஸ்ரீ சத்யநாராயணர் ஆகும். சத்யநாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மஹாலட்சுமியின் நாயகர். ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து செய்யக்கூடிய ஒரு பூஜை சத்தியநாராயண பூஜை ஆகும். இந்தப் பூஜையை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

பூஜையை மேற்கொள்பவர்கள்

இந்த பூஜையை மேற்கொள்பவர்கள் அன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். இந்த பூஜையை சத்தியநாராயணன் படத்தை வைத்து மட்டும் தான் செய்ய வேண்டும். நாராயண அவதாரம் என்பதால் பெருமாள் படத்தை வைத்து செய்தல் கூடாது. வீட்டில் பூஜை அறையிலோ அல்லது ஹாலிலோ பூஜை செய்யும் இடத்தை மஞ்சள் நீர் தெளித்து, கோமியம் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

பீடம் அமைக்க

பிறகு ஒரு பீடம் அமைப்பதற்கு பலகையை வைத்து அதன் மேல் மஞ்சள் பூசி கோலமிட்டு துணி விரித்து அதன் மேல் சத்தியநாராயணன் படத்தை வைத்து பொட்டு வைத்து துளசி மாலை கட்டி போட வேண்டும். துளசி மாலை அணிவது சிறப்பு. மற்ற பூக்கள் கொண்டு எவ்வளவு முடியுமோ? அத்தனை பூக்களையும் கொண்டு அலங்காரம் செய்யலாம். படத்திற்கு இரண்டு பக்கமும் வாழைக்கன்று வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்டலாம் பீடத்திற்கு முன்பு கோலமிட வேண்டும்.

கலசம் அமைக்க

சில்வர் தவிர வெள்ளி பித்தளை செம்பு வைத்து கலசம் அமைக்க வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கும்பத்தை வைக்க வேண்டும். கலசம் தேங்காய்க்கு மஞ்சள் பூசி பொட்டு வைக்க வேண்டும். கலசத்தில் தண்ணீர் விட்டு ஜாதிப்பத்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள் சேர்த்து தீர்த்தம் தயாரித்து அதன் மேல் மாவிலை வைத்து பொட்டு வைத்த தேங்காயை வைத்து கலசம் ரெடி செய்து வைக்கவும். சத்திய நாராயணனுக்கு பிடித்தமான பிரசாதங்களை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க ; நல்வினையில் தான் இறைவனைக் காண முடியும்

நாராயணனுக்கு பிடித்தமான நைவேத்தியம்

சத்ய நாராயணனுக்கு உகந்த போற்றிகளை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சத்யநாராயணன் கதைகளை பாராயணம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, தேங்காய் தாம்பூலம், மாங்காய் சாதம், நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், கேசரி, இனிப்பு பதார்த்தங்கள் போன்ற பிரசாதங்களை படைக்கலாம். அவரவர் சக்திக்கு ஏற்ப பிரசாதங்களை தேர்ந்தெடுத்து செய்து படைக்கலாம். மகிமை மிகப் பெரியவை என்பதால் முடிந்தவரை பிரசாதங்களை செய்து படைக்கலாம். படைத்த பிரசாதத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கும் பிரசாதமாகக் கொடுப்பது கைமேல் பலன் கொடுக்கும்.

பிறகு தூபதீபம் காட்டி பூஜையை முடித்து கொள்ளலாம். இந்த பூஜையைச் செய்பவர்கள் இதில் வைத்துள்ள அனைத்து பிரசாதங்களையும் தன் குடும்பத்தினரோ அல்லது அலட்சியப்படுத்தாமல் அனைத்து பிரச்சாரங்களையும் தனக்குப் போக மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். பூஜை முடிந்தவுடன் பிரசாதங்களை உடனடியாக பகிர்ந்து கொடுக்க வேண்டும். பிரசாதங்களை வைத்து நாளை என்று வேஸ்ட் ஆகக் கூடாது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

தங்கள் வசதிக்கு ஏற்ப இந்த பிரசாதங்களை அதிகமாக செய்து அன்னதானமாக கொடுப்பது சிறந்தது. இந்த பூஜையை தொடர்ந்து வழிபட்டு வர குடும்பத்தில் அனைத்து வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும். பூஜை முடிந்து மறுநாள் இந்த கலச தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விட்டு, பிரசாதமாக அருந்தி விட்டு, மீதி தீர்த்தத்தை செடிகளில் ஊற்றி விடலாம்.

மேலும் படிக்க : கீதை நாயகன் கண்ணனை வரவேற்போம் கோகுலாஷ்டமி ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *