குடியரசு தின விழா…இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு..
கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவை பல கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு குடியசு தினவிழாவில் ராஜ்புத் ரெஜிமென்ட், அஸ்ஸாம் ரெஜிமென்ட், ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை, சீக்கிய லைட் காலாட்படை, ராணுவ ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் ரெஜிமென்ட் மற்றும் பாராசூட் ரெஜிமென்ட் ஆகிய ஆறு படைகள் சேர்த்து மொத்த 16 அணிகள் பங்கேற்கவுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
1- விழாவின் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் தலா ஒரு அணிவகுப்பு குழுவும் பங்கேற்கும்,
2-மத்திய துணை ராணுவப் படைகளில் இருந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில்துறை போலீஸ் படை (CISF), சஷாஸ்த்ரா சீமா பால் (SSB), இந்திய கடலோர காவல்படை (ICG) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆகிய ஐந்து அணிவகுப்புக் குழுக்கள் கலந்து கொள்ளும்.
3-மேலும் கூடுதலாக இந்த ஆண்டு அணிவகுப்பில் இரண்டு பரம்வீர் சக்ரா மற்றும் ஒரு அசோக் சக்ரா விருது பெற்றவர்களும் பங்கேற்க உள்ளனர். விழா தொடங்குவதற்கு முன், தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துவார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4- குடியரசு தின விழா காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். இரண்டு அணிகள் — இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) ஒரு ஆண் குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரியின் (BSF) ஒரு பெண் குழு — மோட்டார் சைக்கிள் அணி வகுப்பில் ஈடுபடுவார்கள். அணிவகுப்பு தளபதியாக டெல்லி ஏரியா கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ராவும், அணிவகுப்பின் இரண்டாவது தளபதியாக டெல்லி ஏரியா தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அலோக் காக்கர் இருப்பார் என்றும் , விஜய் சௌக்கில் இருந்து பாரம்பரிய ராஜ்பாத் வழியாக தேசிய மைதானத்திற்கு அணிவகுத்துச் செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.