நினைத்த காரியம் நிறைவேற இதை படியுங்கள்
நம் காரியங்கள் அனைத்தும் கூடி வருவதற்கு நம்முடைய முழு முயற்சியும் தெய்வத்தின் கருணையும் அவசியம். நாம் முயற்சி செய்வதும் தெய்வத்தின் அனுகிரகத்துடன் தான் என்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் தெய்வம் இல்லாமல் நாம் ஒரு பூஜ்ஜியம் தான்.
பூஜ்ஜியங்கள் பல இருப்பினும் ஒன்று என்னும் எண் கூடினால் தான் அதற்கான மதிப்பு அதிகரிக்கிறது. எத்தனை புஜ்ஜியங்கள் இருந்தாலும் அதற்கு முன் ஒரு ஒன்று இருந்தால் அதனின் தகுதி உயர்கிறது.
அதேபோல் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போன்ற அளவிற்கு மேல் நாம் உழைப்பு போட்டாலும் இறைவனின் அருள் இருந்தால் தான் அனைத்தும் நிகழும். அந்த இறைவனின் அருள் பெற இதனை படியுங்கள்.
நினைத்த காரியம் நிறைவேற அபிராமி அந்தாதியின் இருபத்தி ஐந்தாவது பாடலை படிக்கவும்.
25. நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
விளக்கவுரை
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்