சரியான ஆன்லைன் வகுப்புகளை கையாளும் முறை
தமிழகத்தில் அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சி இருக்கிறது. ஏற்கனவே சில வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது மகிழ்ச்சி தான். கவனம் சிதறாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு உத்திகளை ஆசிரியர்களும், கல்வியாளர்களும், மின் வழிகற்றல் நிபுணர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும், விவாதித்து பலனளிக்கும் வழிமுறைகளை பட்டியலிட வேண்டும்.
தொலைக்காட்சி பாடங்களை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கேட்பதற்காக இசை, நடனம் மற்றும் எளிய உடற்பயிற்சிகளையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இவற்றுடன் உடலையும், கைகளையும் அசைப்பதற்கு 10 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வகுப்பில் சிறிய இடைவேளை கொடுக்க வேண்டும்.
ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளிடம் நேரடியாக பேசுவது போல பேசலாம். இது ஆசிரியரோடு குழந்தைகளுக்கு ஒட்டுதல் ஏற்படுத்தும். குட்டிக்கதை, நகைச்சுவை துணுக்குகள், போன்றவற்றை சேர்த்து சொல்ல வேண்டும். கவனயீர்ப்பு உத்திகள் எல்லோருக்கும் எளிதில் கை வராது. எனவே இவற்றை எங்கே எப்படி செய்யலாம் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது அவசியம்.
மின்வெளி அல்லது தொலைக்காட்சி வழி கற்றல் முறைகளுக்கு ஆசிரியர்களை தயார் செய்வது இன்றியமையாதது என்று சொல்லப்படுகிறது. அரசும், கல்வித் துறை நிபுணர்களும், கல்வியாளர்களும் தான் முன்னெடுக்க வேண்டும். தமிழக தலைவர்கள் கட்டி வளர்த்த எல்லோருக்கும் கல்வி என்ற சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் இடிந்து விடாமல் காப்பாற்றி நம்முடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் படிக்கற்களாக மாற்றுவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து செயல்பட வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள் தான் நிரந்தரமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளை எப்படி நடத்தலாம் என்பது பற்றி லேர்நிங் அண்ட் டெவலப்மென்ட் மேலாளர் இவ்வாறு கூறுகிறார். அன்னை யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பாரதியின் சொல்லை மனதில் பதித்து செயல்பட வேண்டும்.