ஆன்மிகம்ஆலோசனை

வடக்கில் வைத்தீஸ்வரன் கோவிலா!

தென்னகத்து வைத்தீஷ்வரன் கோவில் பாடல் பெற்ற க்ஷேத்திரமாக திகழ்கிறது, வடக்கே பரளி வைத்தியநாதம் ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. இத்திருத்தலம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பீடு மாவட்டத்தில், பரளி என்ற ஊரில் உள்ளது.

"காண்பார்க்குங் காணலாங் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற்- காண்பார்க்குக்
சோதியாய் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்"
-காரைக்காலம்மையார்

பரளி வைத்தியநாதம்

இராவணன் பற்றிய கதை ஒன்றை இத்தலத்திற்கு சிலர் குறிப்பிடுவர் அதை தவிர்த்து இத்தலத்திற்கான வரலாற்றை காண்போம்.

ஸ்தல வரலாறு

வீரமகேந்திரபுரியை தலைநகரமாக கொண்டு அசுரன் சூரபத்மன் அரசாண்டு வந்தான். தாரகாசுரன், சிங்கமுகாசுரன் அவரின் தம்பி ஆவர். மூவரும் எம்பிரான் மீது கடுந்தவம் புரிந்து பற்பல வரம் பெற்றனர். அதில் சூரபத்மன் 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களையும் அரசாள வரம் பெற்றிருந்தான. வரம் பெற்றாலே தலைகனம் ஏறுவது வழக்கம் தானே! அதிலும் அசுரருக்கு தலைகனம் ஏற்பட்டால் விளைவுகள் பயங்கரமாக தானே இருக்கக்கூடும். தேவலோகத்துள் நுழைந்தான் கண்ணில் தென்படும் அனைவரையும் சிறையிலிட்டான். மனிதர்கள் முனிவர்கள் என்று பேதம் பாராமல் அனைவரையும் சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தினான். இது கண்டு தப்பித்த தேவர்களில் சிலர் நான்முகனோடும், திருமாலோடும் திருக்கைலாயத்திற்கு வந்து எல்லா அண்டங்களையும் காக்கும் படி தயாபரனிடம் வேண்டினர். சிவபெருமான் திருவுளம் கொண்டு அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கி அதை குழந்தைகளாக மாற்றி ஆறு கார்த்திகை பெண்கள் அந்த குழந்தைகளை வளர்க்க, சூரபத்மனை வதைக்க கார்த்திகேயன் தயாரானான். அன்னை பார்வதி தேவி தந்த வேலும், வீரவாகுவை தளபதியாக கொண்ட சேனையும் ‘வெற்றி வேல் வீர வேல்’ என்று முழக்கத்துடன் போர்க்கோளம் மூண்டது. சூரபதுமன் சாகாவரம் பெற்றமையால் மரமாக மாறி பிழைத்துக்கொள்ள பார்க்க, அன்னை அருளிய வேலால் முருகப்பெருமான் மரத்தையும் பிளந்து இருபாதியாக்கி ஒன்றை சேவல் கொடியாகவும் மற்றொன்றை மயிலாக மாற்றி வாகனமாக்கி கொண்டார். இந்த தேவாசுரப் போரில் இருப்பக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற தேவையான மருந்துகளை ஒரு மலைப்போல் குவித்து, அதன் மீது அம்மையும் அப்பனும் அடிப்பட்ட வீரர்களுக்கு உதவி செய்தார். போரின் வெற்றி முருகப்பெருமானை சார்ந்தாலும் இவ்வனைத்திற்கும் மூலமாக விளங்கியது எம்பிரான் என்று அனைவரும் உணர குன்றின்மேல் அமர்ந்திருந்த எம்பிரானையும் தேவியையும் தரிசித்து வணங்கினர். கேட்ட வரனை அளிக்கும் அரனிடம் ‘தாங்கள் இங்கே இருந்து அருள்பாளிக்க வேண்டும்’ என அனைவரும் வேண்டினர். அவ்வாறே அம்மையும் அப்பனும் ஜோதி வடிவெடுத்து லிங்க ரூபமாக மாறி ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கிறார்கள்.

பெயர்காரணம்

சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகனை உருவாக்கிய எம்பிரான் அவர்கள் இருவருக்கும் நடந்து போருக்கு பின் அதில் காயமடைந்த தேவர்கள், சேனைப்படையில் இருந்தவர்கள் என பலருக்கு மருத்துவம் பார்க்க பரளி என்ற ஊரின் பக்கத்தில் மருத்துவப் பொருட்களை குன்றாக அமைத்து தாமே வைத்தியம் செய்ததால் வைத்தியநாதர் அழைக்கப்படுவதோடு அத்திருத்தலம் பரளி வைத்தியநாதம் என்றாயிற்று.

மேலும் படிக்க : நலம் தரும் நரசிம்மர் வழிபாடு

சிறப்பம்சம்

உலக உயிர்களைக் காக்கும் எம்பிரானை இத்தலத்தில் வந்து தரிசித்தால் தீராத பிணிகளை தீர்த்து வைக்கின்றார்.

அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *