பல்கலை வித்தகர் யாரு அவர்தான் நம்ம டிஆர்
நாம் பெரும்பாலும் மற்றவர்களை குறைத்தே மதிப்பீடு செய்கிறோம் அல்லது அவர்களின் இன்றைய நிலையை வைத்து விமர்சிக்க அல்லது கலாய்க்க துவங்கி விடுகின்றோம்.
அப்படி வரம்பு மீறி கேலிசெய்யப்படுபவர் சகல கலா வல்லவர் டி.ஆர் அவர்கள். அவரே இன்றைக்கு அவரின் கேலி பிம்பத்திருக்கு காரணம் என்றாலும் அவருக்கா இந்த நிலை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அவர் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் , மாயவரம் Avc யில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
சினிமா தான் தனது மூச்சு என்று அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தார். பிறகு மாயவரம் வடகரையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் ஒரு நிபந்தனையுடன் முன்வந்தார்.
இயக்கம் என்னும் இடத்திலும் தன் பெயர் தான் வர வேண்டும் என்பதே அது. வாய்ப்பு தேடி சலித்தவருக்கோ அப்போது சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை.
1980 இல் இப்படி பல இடர்களை கடந்து ” ஒரு தலை ராகம்” படம் வெளிவந்தது. நித்தமும் ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு வரும் கல்லூரி மாணவர்கள். இதில் ஒரு மாணவனுக்கு சஹ மாணவி மீது காதல்.
அந்தக் காதலுக்கு சூழலே எதிரி… இப்படி மாணவர்களை சுண்டி இழுக்கும் கதை. அனைத்து பாடலும் ஆஹா ரகம் . படம் ஒரு வருடம் ஓடியது. இன்றளவும் இப்படத்தை பல தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர் .
ஆனால் அப்படத்தை இன்று வரை பார்த்ததே இல்லை டி.ஆர் ! ஆம் அவரும் பல கனவுகளுடன் படம் வெளிவந்த அன்றே சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வந்தார். படம் தொடங்கிய சில நிமிடத்தில் கண்களில் நீர் வழிய வெளியேறினார் ! ஆம் அவர் அமைத்த பிண்ணனி இசையை தூக்கிவிட்டு வேறொருவர் அமைத்த இசையை சேர்த்து படத்தை வெளியிட்டு விட்டனர்.
அன்று அவர் சபதம் செய்தபடி இன்றும் அப்படத்தை பார்க்கவில்லை!
மீண்டும் அதே போன்று ஒரு கதையை ” இரயில் பயணங்களில் ” என்ற காவியமாக படைத்து பெரும் வெற்றி கண்டார்.
” தொட்டால் வருவது காமம் , தொடாமல் வருவதே காதல் ” என்பது அவரின் கருத்து. அதற்கு சற்றும் குறைவில்லாமல் தான் அவரது படமும் இருந்தது.
நடிகர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், வசன கர்த்தா, ஆர்ட் டைரக்டர், கேமரா மேன், இன்னும் பற்பல திறன்கள் கொண்டவர் டி. ராஜேந்திரன் அவர்கள் …!
அவரின் முதல் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷங்கர் பானிக்கர் ” ஒரு தலை ராகம்” ஷங்கர் என பிரபலமாக அறியப்பட்டார்.
அவரின் படங்கள் எதார்த்த எளிமைகள் , பாடல்கள் கற்பனையின் உச்சம் , பிரமாண்டம். “இந்திர லோக சுந்தரி” ” தட்டி பார்த்தேன்” போன்ற பாடல்கள் இவரின் திறமையை இன்று வரை பறை சாற்றுகிரது. காதல், தங்கை பாசம், குடும்ப பாசம் போன்றவையே இவர் படங்களின் சாரம்.
இன்றளவும் தனது திறமைகளை மெருகேற்றி வருகிறார். மீண்டும் ஒருநாள் அதே பழைய நாம் மிகவும் விரும்பிய மஹா கலைஞனாக வளம் வருவார் என நம்புவோம்.
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வென்றவர்களில் இவர் மிக முக்கியமான மனிதர். ஊரடங்கு நேரத்தில் இவரதுப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நாம் அறியாத டி.ஆர் பற்றி தெரிவிப்போம் என ஒரு பொறித்தட்டியது. அதில்தான் உருவாக்கினேன்.