புளித்த தயிர், மோர் குழம்பு..!!
குடும்பப் பெண்களுக்கு தினமும் என்ன குழம்பு வைக்கலாம். யோசித்து யோசித்து அலுத்து விட்டதா? புதுசா ட்ரை பண்ணுங்க. குழம்பு வைப்பதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுகிறது. ஈஸியா சிம்பிளாக வேலை முடிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க.
பச்சை மோர் குழம்பு – 1
தேவையான பொருட்கள் : சௌசௌ காய் தோல் சீவி நறுக்கியது அரைக்க கப், தேங்காய்த் துருவல் அரை மூடி, கெட்டித்தயிர் அரை லிட்டர், மிளகு, சீரகம், மல்லித்தழை, பெருங்காயம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் தேவைக்கு ஏற்ப.
செய்முறை : தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், மிளகு, சீரகம், மல்லித்தழை, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் கெட்டித் தயிரை கடைந்து, உப்பு, அரைத்த விழுதையும் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
சிறிதாக நறுக்கிய காய் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீரை வடித்து விட்டு குழம்பில் போட வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார்.
மோர் குழம்பு – 2
தேவையான பொருட்கள் : புளித்த தயிர் அரை லிட்டர், பச்சை மிளகாய் 7, வெண்டைக்காய், கத்தரிக்காய் நறுக்கியது அரை கப், முந்திரி 5, சீரகம் அரை ஸ்பூன், தேங்காய் துருவல் அரை மூடி, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உப்பு , எண்ணெய் தேவைக்கு ஏற்ப. கறிவேப்பிலை சிறிதளவு. கடுகு தாளிக்க கால் ஸ்பூன்.
செய்முறை : தயிரை நன்றாகக் கடைந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய், முந்திரி பருப்பு முதலியவற்றை அரைத்து மையாக எடுத்து வைக்கவும். கடைந்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுதை போட்டு கலந்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு மோர்க் குழம்பில் ஊற்றி குழம்பு பொங்கி வரும் போது இறக்கி மூடி வைக்கவும்.
காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி குழம்பில் போடலாம். பூசணிக்காய் என்றால் அதை வேக வைத்து வடிகட்டிய பிறகு போட வேண்டும். கடைசியில் கொத்தமல்லித் தழை போட்டு இறக்கி விடலாம். குளிர்ந்த நேரங்களில் குழந்தைகளுக்கு தயிர் மோர் கொடுப்பதால் அடிக்கடி சளிப்பிடிக்கும். அதற்கு பதிலாக நன்றாகவே புளிக்க வைத்து, இந்த மாதிரியான குழம்பு வகைகளை செய்து கொடுப்பதால், தயிர், மோர் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. குழந்தைகளுக்கு சளியும் பிடிக்காது. எனவே மழைக்காலங்களில் இந்த மாதிரி குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.