ஓம்கார நாதனாக எம்பெருமான்
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காண்டுவா மாவட்டத்தில் மான்தத்தா தீவில் நர்மதா-காவிரி சங்கமிக்கும் நதி கரையில் அமைந்துள்ளது ஓங்காரேஷ்வரம். சிவபெருமான் எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மலைகளுக்கும் வரமளிக்கும் பரம்பொருளாக திகழும் நிகழ்வை காண்போம்.
"அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுகாண் என்னேடீ? நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ" -திருவாசகம்
ஓங்காரேஷ்வரம்
பெயர்காரணம்
பிரணவப் பொருளாகிய ஓங்காரம் லிங்கத்தை எப்பொழுதும் வழிபட்டுக் கொண்டிருப்பதால் இவ்விடம் ஓங்காரேஷ்வரம் என அழைக்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு
நர்மதை நதி பாய்வதால் விந்திய மலையானது இயற்கை வளங்களோடு செழிப்பாக இருந்தது. மிகுந்த வளங்களுடன் இருந்த விந்திய மலைக்கு (விந்தியன்) மமதை தலைக்கேறியது. விந்திய மலை நாரதரை கண்டு தன் வளங்களை காட்டி தற்பெருமை பறைசாற்றிக் கொண்டிருந்தது. “என்ன தான் செழிப்பாகயிருந்தாலும் உன் உயரத்தை விஞ்சி மேகங்களை முத்தமிடும் மாமேருக்கு இணையாகுமா?” என்றார் நம் கலகப்பிரியர். அவரின் சொல்லில் அர்த்தம் புரிந்து அதற்கு தாமே வழி கூற வேண்டும் என வினவியது. “தயாபரனை நோக்கி தவம் புரிந்து வேண்டுவதை அடைந்துக்கொள்” என்று கூறி புறப்பட்டார். “நாரதரின் கலகம் நன்மைக்கே” என்பார்கள் இந்த கதையின் முடிவையும் காண்போம்.
ஓங்கார ரூபமாய் எந்திரம் வரைந்து அதில் மண்ணால் பிடித்த லிங்கத்தின் வைத்து ஸிரத்தையோடு இரவு பகல் பாராமல் கடும் பூஜையோடு தவம் மேற்கொண்டது. எம்பிரானும் மேரு மலையை விட உயரமாக வளர வரம் அருளினார். ஆனால் ‘மமதை கொண்டால் என் அடியவரால் சிறியதாக்க படுவாய்’ என்ற நிபந்தனையுடன் வரம் அருளினார். இக்காட்சியை இந்திராதி தேவர்கள் அனைவரும் தரிசித்து மகிழ்ந்து ‘ஜோதி சுவருபனே தாங்கள் இங்கே இருந்து மக்களுக்கு அருள வேண்டும்’ என்று வேண்டினர். அப்பொழுது ஓர் அற்புதம் நிகழ்ந்தது; ஓம்கார யந்திரம் அது வடிவில் குன்றானது மற்றும் அம்மணல் லிங்கம் இறுகி கல்லாகி அக்குன்றின் நடுவிலே ஓங்காரேஷ்வரராக காட்சியளிக்கிறார்.
விந்திய மலை விண்னை முட்டும் அளவிற்கு வளர்ந்ததால் தெற்கிலிருந்து வடக்கிற்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கு செல்வது கடினமாயிற்று ஆகையால் சிவ பக்தரான அகஸ்திய முனிவரை வேண்டினர். அவரும் அங்கு வந்து விந்திய மலை சிகரத்தை அண்ணாந்து பார்த்தார் மலையோ மரியாதை நிமித்தமாக உயரத்தை குறைத்து குனிந்தது. இது தான் சாக்கு என்று “தான் வட திசை திரும்பும் வரை குனிந்தே இருக்கும்” படி பணிந்தார். விந்திய மலையும் ஒப்புக்கொண்டது. அகஸ்திய முனிவரோ பொதிகை மலையிலேயே தங்க, விந்திய மலையும் உயராமல் அவர் வருகைக்காக காத்திருக்கிறது.
அங்கிருந்த ஒரே ஓர் ஓங்கார லிங்கமே இரண்டாக ஆயிற்று. பிரணவமான ஓங்காரத்தில் நிலை நிற்கும் இறைவன் ‘ஓங்காரேசுவரர்’ எனப் புகழப்பட்டார். விந்திய மலை பிடித்து பூஜை செய்த மண்ணாலாகிய பார்த்திவ லிங்கத்தில் எந்தச் சிவப்பரம்பொருளின் அருட்பெருஞ்ஜோதி நிலைத்து நின்றிந்ததோ , அந்தப் பரமேசுவரர் ‘அமலேசுவரர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.
மேலும் படிக்க : செல்வம் செழிக்க எக்காரணம் கொண்டும் இதை செய்ய மறவாதீர்கள்….