தொப்பையை குறைக்கும் கொள்ளு ரசம்
பொதுவாக நமது தமிழ் கலாச்சாரத்தின் படி விருந்து படைக்கும் பொழுது இனிப்பில் தொடங்கி தயிர் அல்லது பாயாசம் என இனிப்பிலேயே முடிவடையும். அதேபோல் அசைவ விருந்தாக இருந்தாலும் சரி சைவ விருந்தாக இருந்தாலும் சரி ரசம் என்பது முக்கிய இடம் பிடிக்கும். ரசம் ருசித்து சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மட்டும் இல்லாமல் நம் உடலை காக்கும் ஒரு கவசமாக உள்ளது. என்னதான் அசைவ விருந்து சாப்பிட்டாலும் ரசம் சிறிது சாப்பிடும் பொழுது தான் செரிமான கோளாறு இல்லாமல் நாம் உண்ணும் உணவு செரிக்கும் என்பது தமிழ் கலாச்சார மரபு ஆகும். ரசங்களில் பல வகை உள்ளது. எலும்பு ரசம், மிளகு ரசம், புளி ரசம், தக்காளி ரசம் ,பச்சை புளி ரசம், மூலிகை ரசம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறு பலவகை இருக்கும் பொழுது இப்பொழுது நாம் பார்க்கும் ரசம் உடலை காக்கும் கவசமாக மட்டும் அல்லாமல் நாம் தினந்தோறும் வருந்தும் தொப்பையைக் குறைக்கும் மருந்தாகவும் செயல்படும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1/2 கப்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மல்லி – 1 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
வர மிளகாய் – 6
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கொள்ளு ரசம் செய்முறை
முதலில் ஒரு கடாயில் நாம் எடுத்து வைத்த கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதே கடாயில் சீரகம், மிளகு ,மல்லி, வர மிளகாய் கறிவேப்பிலை பூண்டு பெருங்காயம் ஆகிய அனைத்தையும் போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு நாம் வறுத்து வைத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து பின்பு கொள்ளு மற்றும் சீரகம் மிளகு சேர்ந்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து நாம் அரைத்து வைத்த மசாலா கலவையை கலந்து கொள்ள வேண்டும் தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு புளிக்கரைசல் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். புளியை நீங்கள் வேண்டுமென்றால் மிக்ஸியில் போட்டு அரைக்கும் போதே சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கலந்து கொள்ளுங்கள். பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும் நன்கு கொதித்த பின்பு கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடவும்.
அவ்வளவுதான் சூடான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு ரசம் ரெடி இந்த ரசம் சளி இருமல் காய்ச்சல் ஆகியவற்றுக்கு கூட மருந்தாக பயன்படுகிறது. மேலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கொள்ளு ரசம் வைத்து குடிக்கும் பொழுது தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறைய பயன்படும்.