பிதன் சந்திர ராயை நினைவு படுத்தும் வகையில் ஹேப்பி டாக்டர்ஸ் டே
நாடு முழுவதும் கடுமையான கொடுமையான சூழலில் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கோலாகலம் அவசியமா?
கண்டிப்பாக அவசியம் ஒவ்வொரு மருத்துவரும் மருத்துவத் துறையை சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த நாள் கொண்டாடப் படவேண்டும்.
1 ஜூலை தேசிய மருத்துவர்கள் தினம். இந்திய தேசத்தில் முழுமையாக கொண்டாடப்படும் இந்த நாள் ஒரு தனிநபரின் பிறந்த நாளும் இறந்த நாளுமாக இருக்கிறது. யார் அவர் என்ற ஆவலைத் தூண்டுகிறது!
டாக்டர் பிதன் சந்திர ராய்
ஒரு துறையில் பன்முக வித்தகராக இருக்கும் பலரை நாம் சந்தித்திருப்போம். ஆனால் பல துறையில் வித்தகராக இருப்பவர் டாக்டர் பிதன் சந்திர ராய். இந்தியாவின் சிறந்த மருத்துவர், கல்வியாளர், பரோபகாரர் , சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.
மருத்துவப் படிப்பான எஃப்.ஆர்.சி.எஸ். மற்றும் எம்.ஆர்.சி.பி. ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் முடித்த சில மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நவீன வங்காளத்தின் நிறுவனர் என்ற பெருமைக்கு காரணமான பல செயல்களைச் செய்துள்ளார். பல நிறுவனங்கள் மற்றும் துர்காபூர், கல்யாணி, பிதானநகர், அசோகேநகர் மற்றும் ஹப்ரா ஆகிய ஐந்து முக்கிய நகரங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்ததே இப்பெருமைக்குக் காரணம்.
1 ஜூலை 1882 ல் பிறந்த இவர் வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக 1948ல் பொறுப்பேற்க 1 ஜூலை 1962ல் முதலமைச்சராகவே இறந்தார். வங்காளத்தின் இரண்டாவது முறை முதலமைச்சராக 14 வருடங்கள் செம்மையாக பணிபுரிந்தார்.
இவரை கௌரவிக்கும் பொருட்டு அஞ்சல் துறை இவரின் புகைப்படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
உலகத்தில் உள்ள வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட இந்தியாவில் டாக்டர் பிதன் சந்திர ராயை நினைவுபடுத்தும் வகையில் ஜூலை 1 கொண்டாடப்படுகிறது.
கொரோனாவல் உலகமே பாதிக்கப்பட்ட இந்த நிலையில் இரவு பகல் பாராமல் உழைக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் தனித்தனியே நன்றிகளும் வணக்கங்களும் பலகோடி தெரிவித்தாலும் மிகையாகாது. மருத்துவர் தினமான இன்று எல்லா மருத்துவர்களையும் தலைவணங்கி ஒரு வாழ்த்து போட்டுடுங்க ஹேப்பி டாக்டர்ஸ் டே.