கோகுல்ராஜ் ஆணவக்கொலை – யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள்
தமிழ்நாட்டையே உலுக்கிய சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் அருணுக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களின் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. யுவராஜ் மற்றும் அவரது ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும், குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன், இது நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகான தீர்ப்பு எனக் கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கைதட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர்.
மகனை இழந்து வாடும் கோகுல்ராஜின் தாய் சித்ரா, “நீதிபதி வழங்கிய தீர்ப்பு இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
கோகுல் ராஜ் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு வழக்கறிஞர் மோகன், “தீர்ப்புகளை முழுமையாக படித்து மேல்முறையீடு செய்தாலும் அதையும் எதிர்கொள்வோம். சாதிய வன்மத்துடன் கோகுல்ராஜ் கடத்தப்பட்டு 9 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.