சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷல்.. முட்டை வரைட்டீஸ்..!

வாரத்தில் மூன்று முறை முட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் அவித்த முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் கொடுக்கலாம். உடலுக்குத் தேவையான புரோட்டீன் சத்து இதில் உள்ளது. முட்டையில் எப்படி விதவிதமாக சமைக்கலாம் என்று பார்க்கலாம்.

முட்டை குழம்பு – 1

தேவையான பொருட்கள் : முட்டை 4, சின்ன வெங்காயம் 50 கிராம், பூண்டு 50 கிராம், தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், புளி கால் கப், கறிவேப்பிலை, உப்பு, தேவைக் கேற்ப, எண்ணெய் 3 ஸ்பூன்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் வைத்தால் நிற்காமல் உள்ளே இறங்கினால் அது நல்ல முட்டை. மிதந்தால் கெட்ட முட்டை. முதலில் முட்டையை இது போன்று செக் செய்து கொண்டு பிறகு சமைக்க வேண்டும்.

செய்முறை : முட்டையை அவித்து தோல் உரித்து எடுத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியை கெட்டியா கரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கி, நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு அரைத்த விழுதை சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்தவுடன் அவித்த முட்டைகளை இரண்டாக நறுக்கி, கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்க வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாறிக் கொள்ளவும்.

முட்டை குழம்பு – 2

மேலே கூறிய குழம்பு வைத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். ஊற்றி அது வெந்து மேலே வந்தவுடன், மற்றொன்றை ஊற்ற வேண்டும். குழம்பை கலக்கக் கூடாது. முட்டை கரைந்து குழம்பில் சேர்ந்து விடும். முட்டை வெந்து மேலே மிதக்கும்.

பட்டாணி முட்டை மசால்

தேவையான பொருட்கள் : முட்டை இரண்டு, பட்டாணி 100 கிராம், வெங்காயம் 2, தக்காளி 1, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பல், மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

செய்முறை : காய்ந்த பட்டாணி ஆக இருந்தால் ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை உடைத்து நன்றாக கலக்கி வைத்து விடவும். ஒரு கடாயி வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த பட்டாணியை சேர்த்து கிளற வேண்டும். பட்டாணியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், முட்டை கலவையை ஊற்றி கிளறி இறக்கினால் பட்டாணி முட்டை மசால் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *