செய்திகள்தமிழகம்

சென்னையில் அலட்சியத்தால் நடந்த அவலம்

உயிர் இழப்பு நிகழ்ந்தாலே கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கோம்…

ஆனால் உயிரிழப்பு கவனக்குறைவாலும் நிகழும் என்று நிரூபிக்கும் வகையில் ஒரு துக்ககரமான சம்பவம் நடந்திருக்கிறது.

சென்னை கொத்தவால்சாவடி சின்னத்தம்பி தெருவில் ஜேஸிம் சர்தார் உசேன் என்பவர் மளிகை கடை வியாபாரம் செய்பவர். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் ரிஃபானா பாத்திமா.

மே மாதம் 26ம் தேதி அன்று அந்தக் குழந்தை அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தனித்து விளையாடிக் கொண்டிருக்க, உசேனும், அவரது தந்தையும் மற்றும் சில குடும்பத்தினரும் வராந்தாவில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். குழந்தையின் அம்மா சமையலறையில் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த ரிஃபானா தத்தித் தத்தி நடந்து குளியலறைக்கு சென்றுள்ளது. அங்கு அக்குழந்தையின் உயரத்தில் இருந்த குளியல் வாலியில் பாதி தண்ணீர் நிரம்பி இருக்க அதனை எட்டிப்பார்த்து ஏற முடியாமல் பக்கத்தில் இருந்த துணி துவைக்கும் பலகையில் ஏறி பார்க்க வாளிக்குள் தலைக்குப்புற விழுந்துள்ளது.

அந்த பெண் குழந்தையை காணாது அனைவரும் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அறையில் படுக்கையின் அடியிலும் மற்றும் அந்த வீட்டை சுற்றி பல பகுதியிலும் தேடியுள்ளனர். பின்னர் வீதிக்கு சென்று சிலரிடம் விசாரித்துள்ளனர். சற்று தாமதமாகவே குளியலறையை கவனித்து உள்ளனர்.

பதறிப்போன ரிஃபானாவின் பெற்றோர் அக்குழந்தையை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆறு நாட்களாக மருத்துவமனையில் இருந்த அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் எந்த விதத்தில் இறந்தாலும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு கொரோனாவிற்கான பரிசோதனை செய்யப்படுகிறது. ஆகையால்  தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை அரசு மருத்துவமனை ஸ்டான்லிக்கு இப்பெண் குழந்தையின் உடல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு சென்னை காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். 

உலகமே பல பிரச்சனைகளில் அகப்பட்டு இருக்கும் நிலையில் மக்களின் கவனக்குறைவால் ஏற்படும் இத்தகைய சம்பவங்கள் மேலும் வருத்தமளிக்கிறது. யானையை நாம் இதுபோன்ற அலட்சியத்தால் இழந்தோம். இன்னும் நாம் அலட்சியத்தால் எதுவரை இழப்போம் தெரியவில்லை.

நம்மை நாமே பாதுகாப்போமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *