பசி வந்தால் எந்த பத்து பறந்து போகும்?
தமிழ் மக்கள் இந்த பழமொழியை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இதற்கான அர்த்தம் என்னவென்று கேட்டால், அவர்களிடம் பதில் இருக்காது. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்றால் அந்த பத்து என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
1.மானம்
பொதுவாக விருந்துகளில் ஆடை அலங்காரத்துடன்,மென்மையாக எவரேனும் பார்த்து விடுவார்களா என்ற கூச்சத்துடன், மெதுவாக பட்டும் படாமல் உண்போம். ஆனால் யாசகம் செய்போரை பாருங்கள். எவ்வித தயக்கமும், கூச்சமும் இல்லாமல் தம் பசிக்கு ஏற்ப உண்டு மகிழ்வர். ஆகவே பசி வந்தால் ‘மானம்’ பறந்து ஓடிவிடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
2.குலம்
ஒரு உண்மை சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். என் நண்பன் ஒருவனுக்கு சிறு வருடங்களுக்கு முன்பு, ஒரு விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் என் நண்பனின் நடுக்கத்தை பார்த்து, ஒரு பெரியவர் தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்தார். அதை என் நண்பன் மறுத்தான். சிறிது நேரங்களுக்கு பிறகு அவனிடம், ‘ஏன் அவரிடம் தண்ணீர் வாங்கவில்லை?’ என்று கேட்டேன். அதற்கு அவன், நாங்கள் எங்கள் குலத்தில் பிறந்தவர்களின் வீட்டில் மட்டுமே தண்ணீர் அருந்துவோம் என்று மார்தட்டிக் கொண்டு கூறினான். அதே நண்பனுக்கு, சில வருடங்கள் கழித்து ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது, இரவு 2 மணி இருக்கும். 16மணி நேர பசி. அப்பொழுது அருகில் இருந்த கிராமப்புற வீட்டில் கதவைத்தட்டி, ‘அம்மா மிகவும் பசியாக இருக்கிறது, இங்கு எந்த கடைகளும் இல்லை. ஏதேனும் உண்ண உணவு கிடைக்குமா? என்று கேட்டான். ஆகவே பசி வந்தால் மானம் மட்டுமல்ல கலமும் பறந்து ஓடிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
3.கல்வி
எவ்வளவு பெரிய ஞானவானாக இருந்தாலும் பசி என்று ஒன்று வந்துவிட்டால், தான் சிறு குழந்தையில் இருந்து கற்ற கல்வி அனைத்தும் பறந்து போகும். பசி உணர்வை ஆற்றின பிறகே தான் கற்ற கல்வி அனைத்தும் நினைவிற்கு வரும்.
4.வண்மை
நாட்டை ஆளும் அரசனாக இருந்தாலும், பசி என்று வந்துவிட்டால், அவனிடம் இருக்கும் அத்தனை பொன், புகழ், வளம், செல்வம் ஆகிய அனைத்தையும் மறந்த நிலையிலேயே உணவை தேடி அழைந்து செல்வான் என்பது ஆச்சரியம் அல்ல.
5.அறிவுடைமை
உண்மை பசியை அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடமும் புத்தி மழுங்கி, தன் திறனை ஆற்ற இயலாமல் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பது அறிவியலின் கூற்று.
6.தானம்
தன் வயிற்றை நிரப்பாமல், பிறர் வயிற்றை நிரப்ப வேண்டும் என்று எந்த மனிதனும் நினைத்ததில்லை, நினைப்பதும் கடினமே.
7.தவம்
பொதுவாக ஞானகளின் உபதேசங்களை கேட்க்கும் முன், வந்தவர்களின் பசியை ஆற்றிய பிறகே, தனது உபதேசத்தை தொடங்குவார்கள். ஏனென்றால் பசியோடு இருக்கும் ஒரு மனிதனால் தவம் போன்ற அசாத்திய விசயங்களைச் செய்ய அவனது மனம் ஒத்துழைக்காது.
8.உயர்ச்சி
எப்பொழுதும் பசியோடு இருக்கும் ஒரு நபரால் உடைகள், பாதுகாப்பு, செல்வம் இலட்சியம் போன்ற விசயங்களை பற்றி சிந்திக்ககூட முடியாது. உணவே உயிரின் அடிப்படை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
9.தாளாண்மை
எவருக்கும் தலை குணியாமல் ஆணவத்தோடு நடந்து கொள்ளும் மனிதர்கள் கூட, உண்மை பசி என்று வந்துவிட்டால் தங்களின் அகங்காரம் எங்கு பறந்து போகும் என்றுகூட கூற முடியாது.
10.காமம்
பத்து நாட்கள் பட்டினியாக இருக்கும் ஒரு காம வெறியனின் முன், அழகான பெண் ஆடை இல்லாமல் நின்றால் கூட அவனுக்கு காமம் தழைத்தோங்காது. அத்தகைய வலிமை கொண்டது உண்மை பசி.
உண்மை பசியை இங்கு இருக்கும் 99.99 சதவீத மக்கள் அனுபவித்ததில்லை. காரணம், இறைவன் அந்த கொடுமையை நமக்கு காட்டியதில்லை என்பதே உண்மை. நிகரற்ற கருணையாளன் அவனே! மேற்கண்ட பத்தும் உண்மையில் பறந்து போகுமா ?என்ற கேள்வி இருந்தால், எந்த வித விரதத்தையும் மேற்கொள்ளாமல், ஒரு நான்கு நாட்களுக்கு உண்ணாமல் இருந்து பாருங்கள். அனுபவம் தரும் உண்மையை எவராலும் தர இயலாது