ஆன்மிகம்ஆலோசனை

அவந்தி… உஜ்ஜயினி…மஹாகாளரேஷ்வரம்…

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா விழாவிற்கு சிறப்பு வாய்ந்த தலமான உஜ்ஜயினி மஹாகாளேஷ்வரமே நாம் காண உள்ள மூன்றாவது ஜோதிர்லிங்க தலம்.

"காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளம் கைதொழுது வாழ்த்து"
-ஐயடிகள் காடவர்கோன்

மஹாகாளரேஷ்வரம்

மஹாகாளரேஷ்வரம் ஜோதிர்லிங்க திருக்கோவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷிப்ரா நதிக்கரையில் உள்ள அவந்தி (அ) உஜ்ஜயினி நகரில் உள்ளது.

ஸ்தல வரலாறு

அவந்தி நகரத்தில் விலாசன் என்று ஓர் அந்தணன் வாழ்ந்து வரலானான். சிறந்த சிவபக்தர் ஆவார். அந்நகரத்தின் பக்கத்தில் அடர்ந்த ஆரண்யம் இருந்தது. அதில் சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் வாழ்ந்தான். நகரத்தையும் அதில் இருக்கும் மக்களையும் துன்புறுத்தி சூறையாடி துவம்சம் செய்துக்கொண்டிருந்தான். மக்கள் அனைவரும் அவனின் அக்கிரமம் தாங்க முடியாமல் அந்தணனை அனுகினார்கள். அவரும் மஹா யாகம் செய்யுமாறு ஆலோசித்தார். மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொருள் திரட்டி வேத விற்ப்பணர்களையும் சாதுக்களையும் வைத்து வேள்வி வளர்த்து மிக விமர்சையாக யாகம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது தூசனன் அங்கு வந்து அக்கிரமம் செய்யலானான் யாக குண்ட பூமி வெடித்து ஒரு லிங்கம் பேரொளியுடன் தோன்றியது. சிவலிங்கம் இரண்டாக பிளந்தது அதிலிருந்து மஹாகாளர் தோன்றி தூசனை அழித்தார். மக்கள் அனைவரும் பேரானந்தத்தில் திளைத்தனர். மக்கள் அனைவரும் தங்களை காத்த மஹாகாளரை அங்கேயே தங்கி அவர்களை காக்கும் படி வேண்டினர். மஹாகாளரும் ஆவேசம் தணிந்தார், வெடித்த லிங்கம் ஒன்று சேர்ந்தது, ஜோதி வடிவமாக அதில் கலந்து ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கிறார்.

வரலாற்று சிறப்பம்சம்

  • ஹரசித்தி தேவி

அரக்கர்களான சண்டன், பிரசண்டன் இருவரும் தவம் புரிந்து ‘மும்மூர்த்திகளாளும் தம்மை வெல்ல முடியாது’ என்று வரம் பெற்றனர். வரம் பெற்ற அகந்தையில் தேவலோகத்தை கைப்பற்றிய பின் திருக்கைலாயத்திற்கு வந்துக்கொண்டிருந்தனர். அம்மையும் அப்பனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்கள். அரக்கர்கள் கைலாய காவர்களை துவம்சம் செய்து அனுமதியின்றி உள்ளே நுழைந்து ஹரனாகிய சிவபெருமானை போருக்கு அழைத்தனர். எம்பிரான் பார்வதி தேவியிடம் அரக்கர்களின் வரத்தை சொல்லி தேவியே அதற்கு வழி செய்யுமாறு கூறினார். கணவனுடன் மகிழ்ச்சியாய் விளையாடுவதை கெடுத்த கோபத்தில் இருந்த தேவி ஹரனின் சித்தம் அறிந்து தன் ஒன்பது சக்திகளுடன் சிம்மவாஹினியாக போருக்கு புறப்பட்டார். தேவியின் தோற்றத்தை கண்ட அரக்கர்கள் பயத்தில் அவந்தியுள்ள காட்டுக்குள் ஒளிந்துக்கொண்டனர். மஹாகாளி விடாமல் பின் தொடர்ந்ததால் எருமை கடா வேடம் பூண்டு சண்டையிட்டான். இருவரையும் வதம் செய்து மஹாகாளி நவசக்தியுடன் வெற்றி வாகை சூடினார். சிவபெருமானாகிய ஹரனின் சித்தத்தை பூர்த்தி செய்த தேவி என்பதால் ஹரசித்தி தேவி ஆனார்.

இத்தேவியே மன்னர் விக்ரமாதித்தனின் குலதெய்வமாவார்; மன்னருக்கும் பட்டிக்கும் வரமளித்துள்ளார்.

  • அமுதத்துளி

பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தப்பொழுது மஹா விஷ்ணு மோஹினியாக உருவெடுத்து அசுரர்களிடமிருந்து காபாற்ற ஓடியப்பொழுது நான்கு அமுதத்துளிகள் பூமியில் விழுந்தன. அதில் ஒன்று அவந்தியில் விழுந்தது. மற்றவை ஹரித்துவார், பிரயாகை, நாசிக் ஆகியவை ஆகும்.

  • பெயர்காரணம்

அமுதத்துளி சிந்திய இத்தலம் மக்கள் பாவங்களை போக்கக்கூடிய தலமாக மாறிவிட்டதால் ‘அவந்தி’ எனப்பெயர் பெற்றது.

சுதன்வா என்ற மன்னன் இத்தலத்தை போரில் வென்று ஆட்சி செய்தான். அப்பொழுது ஜைன சமயம் உச்ச நிலையில் இருந்தது. ஆகையால் உஜ்ஜயினி (உத்+ஜைன=உச்ச நிலையில் ஜைன மதம்) எனப்பெயர் மாற்றம் செய்தார் சுதன்வா. இன்றும் ஜைன கோவில்களை காணலாம்.

அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.

மேலும் படிக்க : செல்வம் செழிக்க எக்காரணம் கொண்டும் இதை செய்ய மறவாதீர்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *