பரபரப்பு.. அதிமுக முன்னாள் அமைச்சர் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது சில இடங்களில் அதிமுக மற்றும் திமுகவிடையே மோதல்கள் வெடித்தன.
அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, திமுக நிர்வாகி ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதற்கு திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஜெயக்குமாரின் சட்டை மட்டுமல்ல மொத்தமும் கழட்டப்படும் என காட்டமாக பேசியிருந்தார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்ததாக ஜெயக்குமார் வீட்டில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு வேறு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
திமுக நிர்வாகி தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40க்கும் மேற்பட்டோர்மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவுசெய்ததோடு, தற்போது ஜெயக்குமாரை கைதும் செய்துள்ளது. இதையடுத்து அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.