அபிராமி அந்தாதி பாடல்10-12 உரை விளக்கம்
கலியுகத்தில் காக்கும் சக்தியாய் அன்னையவள் நமக்கு துணை நிற்பாள் அவளை உணர்ந்தால் அண்டம் எல்லாம் நமக்கு சவால் எனில் அத்தனையும் அவள் அருளாளே வெல்லலாம்.
வாழ்க்கையில் நாம் மோட்சம் பெறவும், இல்லற வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி பெற நமது வாழ்வின் அங்கமாய் தியானம் நிலைக்க அபிராமி அந்தாதி துணை புரியும். அபிராமி அந்தாதிப் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உரையை அழகாய் விளக்கியுள்ளார் அதனை காண்போம்.
10. மோட்ச சாதனம் பெற
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
உரை
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
உரை
அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
12. தியானத்தில் நிலைபெற
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
உரை:
என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!