ஆன்மிகம்ஆலோசனை

அபிராமி அந்தாதி பாடல்கள் 16-18 விளக்கம்!

அபிராமி அந்தாதி பாடல்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அபிராமித்தாயின் அருள் பெற வேண்டுமா அபிராமி அந்தாதி பின்பற்றிப் படிக்க வேண்டும். கண்ணதாசன் விளக்கவுரையுடன் சிறப்பாக உள்ளது பக்தியோடு படிக்கவும்.

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

விளக்க உரை

கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

விளக்க உரை

அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.

18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

விளக்க உரை

அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.

மேலும் படிக்க : நவராத்திரி இரண்டாம் நாளின் சிறப்பும்.. அன்னையை வணங்க வேண்டிய வழி முறைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *