செய்யும் செயலில் ஆளுமை பெற அபிராமி அந்தாதியின் பாடல் -39
நம் அனைவருக்கும் நாம் சொல்லுகின்ற கருத்தை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இடத்தில் நம் ஆளுமை உயர்ந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ணுவோம். அதற்காக நம் அபிராமி பட்டர் இந்த பதிகத்தை நமக்காக எழுதியுள்ளார். பாடலையும் அதன் பொருளையும் படித்து பயன்பெறுவோம்…
ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!
பாடல் விளக்கவுரை
அபிராமி அன்னையே! உன்னுடைய திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றுக்கு என்னை ஆளுகின்ற அருள் உண்டு. உன் கடைக்கண் கருணை உண்டு. ஆகையால் எமன் இடத்திலிருந்து எனக்கு மீட்சி உண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிட்டால் அது என்னுடைய குறையே.உன்னுடைய குறையல்ல.. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பகத்தில் அமர்ந்தவளே ! என் அபிராமி அன்னையே!
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் இந்த பதிகத்திற்கு பொருள் விளக்கம் அளித்துள்ளார்.
இப்பாடலை தினமும் நாம் படித்து வர நாம் செய்யும் செயல் அனைத்திலும் ஆளுமை கிடைக்கும்.