அபிராமி அந்தாதி உரை விளக்கம் பாடல்கள் 7-9
அபிராமி அந்தாதி பாடல் தினசரி பாடும் பொழுது மலையென வரும் சிக்கல்களை எல்லம் பனியெனத் தீர்த்து வைக்கும். அன்னை அபிராமி அந்தாதி பாடல்களுக்கு கண்ணதாசன் அவர்கள் உரை எழுதிய விளக்கமும் கொடுத்துள்ளோம் தினசரி படித்து வரவும்,
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
உரை
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே!
தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
உரை
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள்.
செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.
9. அனைத்தும் வசமாக
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும்.
அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.