நாளை!பெருமாள் தரிசனம்… முதல் சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டு அருள் பெறுவோம்!
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளின் அருளையும், சனி பகவானின் கெடுபலன்களிலிருந்து நிவாரணத்தையும் பெற மிகச் சிறந்த நாட்களாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட பின்பற்ற வேண்டிய முக்கிய ஆன்மீக வழிமுறைகள் தெளிவாக பார்க்கலாம்.
வீட்டைத் தூய்மைப்படுத்துதலும் விரத அமைப்பும்
வெள்ளிக்கிழமை மாலையிலேயே வீட்டைத் தூய்மை செய்து, பூஜையறையை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சனிக்கிழமை அதிகாலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4:30 முதல் 6:00 மணிக்குள்) எழுந்து நீராடி, தூய ஆடைகளை அணிய வேண்டும். அன்று நாள் முழுவதும் முழு விரதமோ அல்லது பால், பழங்களை மட்டும் உட்கொண்டோ விரதம் இருப்பது நன்மையளிக்கும்.

துளசி மாலையும் தீப வழிபாடும்
மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தது துளசி இலைகளாகும். வழிபாட்டின் போது பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது சிறப்பு. வீட்டில் பித்தளை அல்லது மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, எள் தீபம் அல்லது சாதாரண திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். துளசி தீர்த்தம் தயார் செய்து சுவாமிக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.
தளிகை இடுதல்
புரட்டாசி சனிக்கிழமையின் மிக முக்கிய வழிபாடு ‘தளிகை இடுதல்’ ஆகும். பெருமாளுக்குப் பிடித்த வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், வடை மற்றும் எள் உருண்டை போன்றவற்றைத் தயார் செய்து படைக்க வேண்டும். மாவிலக் கேற்றி வழிபாடு செய்வதும், ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்ற நாமத்தைச் சொல்லி வழிப்படுவதும் பெரும் புண்ணியத்தைத் தரும்.
நாம சங்கீர்த்தனம் மற்றும் தான தர்மங்கள்
பூஜையின் போது விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம் அல்லது கோவிந்த நாமாவளிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது, குறிப்பாக எள் கலந்த உணவு அல்லது ஆடை தானம் அளிப்பது சனி தோஷங்களைப் போக்கி வாழ்வியல் மேன்மையைத் தரும்.
பெருமாளின் அருள் கிடைத்ததின் அறிகுறி
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபடுவதன் மூலம் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கண்ட சனியால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் மற்றும் கெடுபலன்கள் குறையும்.
மகாவிஷ்ணு மற்றும் மகாலக்ஷ்மியின் அருள் கிடைத்து, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
வறுமை நீங்கி, தொழிலிலும் வியாபாரத்திலும் நல்ல வளர்ச்சியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் உண்டாகும்.
கோவிந்தா’ நாமத்தை உச்சரித்து வழிபடுவதால் மனக்கவலைகள் மறைந்து, தெளிவான சிந்தனையும் காரிய வெற்றியும் கிட்டும்.
அறியாமல் செய்த தவறுகள் மற்றும் முன்ஜென்ம வினைகள் நீங்கி, மனத்தூய்மை அடையும்.

