எப்படிப்பட்ட கணவர் வரவேண்டும் திருவெம்பாவை பாடல் 9 விளக்கம்
சிவபெருமானை போற்றி மாணிக்கவாசகர் நமக்கு தந்த அற்புத நூல் திருவெம்பாவையாகும் மார்கழி மாதத்தில் நோன்பு இருக்கும் பெண்கள் சிவபெருமானை எவ்வாறு வணங்க வேண்டும், சிவபெருமானின் பெருமைகளையும் புகழையும் எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதை திருவெம்பாவை பாடலை தெளிவாக கூறியுள்ளார். இந்த பாடலில் நோன்பு இருக்கும் பெண்கள் தனக்கு கணவராக வருபவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சிவபெருமானிடத்தில் கூறுவதை பாடலாக தந்துள்ளார் மாணிக்கவாசகர்.

திருவெம்பாவை பாடல் 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.
பாடல்
கோடி ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை என்று சொல்லக்கூடிய பழமையானவனே! மேலும் புதுமைக்கெல்லாம் புதிதானவனே! மங்கையர்களாகிய நாங்கள் உன்னைத் தலைவனாகப் பெற்றோம். உன் சிறப்பு மிக்க அடியவர்களாகிய நாங்கள் உன்னை வணங்குவோம், உன் தொண்டர்களாகிய சிவனடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவர்களிடத்தில் நல்ல நட்புக் கொள்வோம். உன் பக்தனாகிய சிவனடியார்கள் மட்டுமே எங்கள் கணவர்களாக வர வேண்டும்.

அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட உடனே முகம் சுளிக்காமல் செய்வோம்.எங்கள் பெருமானே! எங்களுக்கு இவ்வாறு கிடைக்குமாறு அருள் புரியவேண்டும். இதனால் நாங்கள் எந்த குறையும் இல்லாதவர்களாய் இருப்போம் என்று உளமாற மனம் உருகிப் பாடி கன்னியர்கள் பாவை நோன்பு நோற்கின்றனர்.