கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ரெசிபி
உலகில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலைஎடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும், யுகந்தோறும் அவதரிப்பேன் என்பது கீதையின் நாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு.
தர்ம நெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருஷேத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற் கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். இந்நன்னாளை கோகுலாஷ்டமி நாளாக, ஜென்மாஷ்டமி நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இத்தினத்தில் கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை தயாரிப்பதை பற்றி பார்க்கலாம்.

முருக்கு
தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு கால் கப், கடலைமாவு 2 கப், ஓமம், கருப்பு எள்ளு தலா அரை ஸ்பூன், உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு. வெண்ணெய் அரை ஸ்பூன்.
செய்முறை : மாவை சலித்து எடுத்து கடலை மாவையும், அரிசி மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் ஓமம், எள்ளு கலந்து கொள்ளவும். தண்ணீரில் சிறிது உப்பு வெண்ணை கலந்து இந்த மாவில் தெளித்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து முறுக்கு பிடியில் இந்த மாவை வைத்து பிழிந்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும். இதே போல் எல்லா மாவையும் பிழிந்து சுட்டு எடுத்தால் முள் முறுக்கு தயார்.

அப்பம்
தேவையான பொருட்கள் : கோதுமை, பச்சரிசி இரண்டும் சமமாக எடுத்து ஊறவைத்து பணியார மாவு பதத்தில் அரைத்து இதனுடன் வெல்லம், ஏலக்காய், சிறிது உப்பு கலந்து பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை விட்டு வேக வைத்து எடுத்தால் கோதுமை இனிப்பு அப்பம் தயார்.
பொட்டுக்கடலை உருண்டை
ஒரு டம்ளர் பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடி செய்து இதனுடன் சிறிது வெல்லம், ஏலக்காய் கலந்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து உருண்டை பிடித்தால் பொட்டுக்கடலை உருண்டை தயார்.