15 ஆம் நாள் திருப்பாவை திருவெம்பாவை பாடல்
திருப்பாவை மற்றும் திருவெம்பாவை போன்ற ஆன்மீகப் பாடல்களை பாடி கம்சனை அளித்த கண்ணன் மாயவன் புகழ் பாடுவது மற்றும் பேரரசனாக சிவபெருமான் புகழ் பாடலாம்.
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
கோபியரை துயிலெழுப்பும் பாசுரங்களில் இது கடைசிப் பாசுரம். சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை துயிலெழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் உறக்கம் விட்டெழுந்த கோபிகை ஒருத்தியுடன் ஆண்டாள் உரையாடுவதைப்போல அமைந்துள்ளது.
இளமையான கிளியைப் போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே. நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை.
நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். அனைவரும் வந்து விட்டனர். கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாய் என்கின்றனர்.
திருவெம்பாவை – 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
ஒற்றைக் காலால் பூச்செடிகள் குளத்தில் சிவ தவம் செய்கின்றன. அதனால் அவை அதிக அழகு பெறுகின்றன. எம்பெருமான் சிவனது நினைப்பே சித்தமெங்கும் இருக்கும். அம்பலவாணன் புகழைப் பேசியபடி உறக்கத்திலும் நாவு அசைந்துகொண்டே இருக்கும்.
அவனது கருணையும், பிரியமும் பக்தர்களின் மனதை நெகிழ வைக்கும். அது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை அருவியாய்க் கொட்ட வைக்கும். மண்ணில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து யாரைப் பணிந்து வணங்குகிறோம் தேவர்களையா? பெருமாளையா? பிரம்மாவையா? இல்லை பக்திப் பரவசத்தால், நாம் யார் மீது இப்படி பைத்தியமாய் ஆகிவிட்டோம்? அந்த ஆட்கொள்ளி யார்? அவன், சிவன்தான்.
அவனைப் பணிந்து வணங்குவோம். பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி, கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான, மலர் நிறைந்த இந்த நீரில் ஆடுவோம்! ஈசனைத் தொழுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்