ஆன்மிகம்ஆலோசனை

முப்பத்து மூவர் அமரர்க்கு திருப்பாவை 20

கண்ணன் குணங்களை ஆயர்பாடி கண்ணன் அழகை வர்ணித்துப் பாடும் கோபியர் நப்பின்னை அழகையும் வர்ணித்து பாடுவார்கள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

விளக்கம்: கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள்.

மேலும் படிக்க : வீட்டில் ஆன்மீகம் செழிக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *