அபிராமி அந்தாதி 27 வது பாட்டு
அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்… அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதனை படித்து பயன் பெறுவீர்கள்.
பாடல் வரிகள்:
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
பாடலின் பொருள்:
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!