ஆன்மிகம்ஆலோசனை

தைத்திருநாள் பொங்கல் வைத்து வழிபடும் முறை

சூரியன் உதயமாகும் நேரத்தில் அதிகாலையில் பொங்கல் வைப்பது பாரம்பரியமாக இருந்தன. தற்போது சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள்ளேயே குக்கரில் பொங்கல் வைக்கும் பழக்கம் மாறிவிட்டன. இன்றைய தலைமுறையினரும் முன்னோர்கள் வழி பொங்கல் இடுவதை தெரிந்துகொண்டு எதிர்காலத்திலும் இவற்றை கடைபிடித்தல் வேண்டும். சூழ்நிலையை காரணம் காட்டி பாரம்பரியங்களை மறப்பது முறையானது அல்ல.

ஆங்காங்கே தெரு மக்கள் ஒன்றுகூடி நல்ல நேரத்தில் ஒன்றாக இணைந்து பொங்கல் வைப்பார்கள். வீட்டு வாசலில் வைக்க முடியாதவர்கள் தெருக்களிலும், கோவில்களுக்குச் சென்று பொங்கலிடுவது வழக்கம். பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஒரு சேர முழக்கம் இடுவார்கள். சூரியனை நமஸ்காரம் செய்து முழக்கமிட்டு பொங்கல் வைப்பார்கள்.

ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழாவாக மக்களிடையே பொங்கல் வைக்கும் விழாவை கொண்டாடினார்கள். பொங்கல் அன்று காலை நல்ல நேரம் பார்த்து வீட்டின் முன் பகுதியில் குத்துவிளக்கேற்றி அதன் முன்பாக வாழை இலையை போட வேண்டும். இலையின் இடதுபக்கத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். நடுவில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் பிடி கிழங்கு, பூசணி துண்டு, சீனி அவரை, அவரைக்காய், வள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, கருணை கிழங்கு, கத்தரிக்காய், காப்பரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு வைக்க வேண்டும்.

மேலும் படிக்க : விநாயகருக்கு விரதம் இருப்பவரா நீங்கள்!

இரண்டு கரும்புகளை ஓலையை வெட்டாமல் நீளமாக அதன் ஓரத்தில் சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். பொங்கல் பானை மண் அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைத்து பொங்கலிட வேண்டும். திருவிளக்கிற்கு முன்பாக பத்தி கற்பூர ஆராத்தி காட்டிய பின்பு, குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு குல தெய்வம் இருக்கும் திசையை நோக்கி காட்டிய பிறகு, சூரிய பகவானுக்கும் ஆரத்தி காட்ட வேண்டும்.

தேங்காயை உடைத்து அதன் நீரை பானையில் விட வேண்டும். சுத்தப்படுத்திய பச்சரிசியை களைந்து அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் காட்டி அடுப்பை பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவை இட வேண்டும். குலவை இடத் தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று முழங்க வேண்டும்.

பொங்கல் பானையிலுள்ள சுடும் நீரை அரிசி வேகும் அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு மீதி நீரை இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும் அரிசியை போட்டு வெந்த பிறகு கடைசியாக இறக்கிவிட்டு, இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும். வெறும் பச்சரிசி பொங்கல், சர்க்கரைப் பொங்கல் இரண்டு பானைகளையும் சமைத்து இறக்கி திருவிளக்கு முன்பு வைத்து சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க : மகாபரணி… பித்ருதோஷம் தீர்க்க உகந்த நாள்!

சூரியன் பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகங்களை பாராயணம் செய்து வழிபட்ட பிறகு பொங்கலை சிறிது காகத்திற்கு படைத்துவிட்டு முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உண்ணலாம். படையல் வைத்துள்ள காய்கறிகளை அன்றைய மதிய உணவில் சமைத்து சாப்பிடலாம்/ இரவில் முன்னோரை நினைத்து இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து அவற்றை தானமாக கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *